சென்னை பாடியில் பட்டப்பகலில் ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை

சென்னை பாடி பகுதியில் பட்டப்பகலில் ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update:2022-12-15 11:49 IST

சென்னை வில்லிவாக்கம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற கருக்கா சுரேஷ் (வயது 40). ரவுடியாக வலம் வந்தார். இவருடைய மனைவி கமலா. இவர், சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.

நேற்று மதியம் சுரேஷ், தனது மனைவிக்கு சாப்பாடு கொடுக்க சென்றார். சென்னை பாடி வன்னியர் தெரு அருகே சென்ற சுரேசை, 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார், கொலையான சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொலையான சுரேஷ், புளியந்தோப்பு போலீஸ் நிலைய பழைய குற்றவாளி ஆவார். இவர் மீது ஒரு கொலை வழக்கு, 6 கொலை முயற்சி வழக்கு, 35 வழிப்பறி வழக்குகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகள் உள்ளது.

2010-ம் ஆண்டு புளியந்தோப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீட்டுக்குள் புகுந்து பெண்களை கற்பழித்து வந்துள்ளார். அப்போதைய துணை கமிஷனர் சுரேசை, சுட்டுப்பிடிக்க உத்தரவு பெற்று தேடி வந்தார். இதனால் சுரேஷ் தப்பி ஓடி தலைமறைவாக வாழ்ந்து வந்தார். அதன்பிறகு மீண்டும் பல்வேறு வழிப்பறி, கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டு கைதான சுரேஷ், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 45 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த சுரேஷ் அம்பத்தூர், வில்லிவாக்கம் பகுதிகளில் வசித்து வந்தார். இந்தநிலையில் மனைவிக்கு சாப்பாடு கொண்டு சென்ற சுரேஷ் கொலை செய்யப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எனினும் அவரது கொலைக்கான காரணம் தெரியவில்லை. கொலையாளிகள் பிடிபட்டால்தான் கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்