ஆத்தூர் பஜாரில் 3 கிராம மக்கள் சாலை மறியலால் போக்குவரத்து கடும் பாதிப்பு
ஆத்தூர் பஜாரில் திங்கட்கிழமை குமாரபண்ணையூர் உள்ளிட்ட 3 கிராம மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டதால் சுமார் 3½ மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.;
ஆறுமுகநேரி:
ஆத்தூர் பஜாரில் நேற்று குமாரபண்ணையூர் உள்ளிட்ட 3 கிராம மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டதால் சுமார் 3½ மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சாலை பழுதால் அவதி
ஆத்தூர் அருகே உள்ள குமாரபண்ணையூர், செல்வன்புதியனுர், புதுநகர், சேர்ந்தபூமங்கலம் ஆகிய கிராமங்களில் பல ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் ஆத்தூரிலிருந்து அவர்களது ஊர்களுக்குச் செல்லும் சாலைகள் கடந்த சுமார் 15 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் இந்த சாலைகளை கடப்பதற்கு கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குடிமகன்கள் தொல்லை
மேலும் ஆத்தூரில் இருந்து ஊருக்கு செல்லும் வழியில் ஆத்தூர் மெயின் பஜாரில் டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் இப்பகுதியில் மதுபிரியர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெண்கள், பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், இந்த டாஸ்மாக் கடையை அகற்றவும் தொடர்ந்து 3 கிராம மக்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த மாதத்தில் இந்த கோரிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, ரோட்டை புதுப்பித்து தரவும், மதுபான கடையை மாற்றவும் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
சாலை மறியல்
ஆனால் ஒரு மாதமாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் 3 கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலையில் ஆத்தூர் மெயின் பஜாரில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
உடனே திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், டாஸ்மாக் உதவி மேலாளர் கோபாலகிருஷ்ணன், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், ஆழ்வார்திருநகரி யூனியன் ஆணையாளர்கள் பாலசுப்பிரமணியம், கருப்பசாமி ஆகியோர் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாற்றுப்பாதையில் வாகனங்கள்
இந்த நிலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால், ஆறுமுகநேரியில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் குரும்பூர், ஏரல் வழியாக திருப்பி விடப்பட்டன. அதேபோல் தூத்துக்குடியிலிருந்து வந்த வாகனங்கள் முக்காணி ரவுண்டானாவில் இருந்து ஏரல் வழியாக திருச்செந்தூர் பகுதிக்கு திருப்பி விடப்பட்டன.
பேச்சுவார்த்தையில் நீண்டநேர இழுபறி நீடித்த நிலையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என பகல் ஒரு மணிவரை கொளுத்தும் வெயிலில் பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. அப்போது கொளுத்தும் வெயிலில் சில பெண்கள் மயக்கமுற்றனர். அவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கலால் பிரிவு உதவி கலெக்டர் செல்வ விநாயகம், திருச்செந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆகியோர் போராட்ட குழுவினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
போராட்ட குழுவின் சார்பில் ஆத்தூர் குளம் கீழ் பகுதி விவசாயிகள் சங்க தலைவர் சி.பி.செல்வம், ஆத்தூர் அரசு பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் 3 கிராமங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
3½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பேச்சுவார்த்தையில் தற்போது பழுதடைந்து உள்ள சாலையில் ஒரு பகுதியை உடனடியாக புதுப்பிக்கவும், மற்ற பகுதிகளை விரைந்து மாவட்ட நிர்வாகத்தில் நிதி பெற்று புதுப்பிக்கவும் உறுதி அளிக்கப்பட்டது. மேலும், டாஸ்மாக் கடையை 15 நாட்களுக்குள் இடமாற்றம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததின் பேரில் போராட்டத்தினை கிராம மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் சுமார் மூன்றரை மணி நேரம் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.