ஆசனூரில்சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழைமரம் முறிந்து பஸ் மீது விழுந்தது; 40 பயணிகள் உயிர் தப்பினர்

ஆசனூரில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சூறாவளிக்காற்றால் மரம் முறிந்து கர்நாடக அரசு பஸ் மீது விழுந்தது. இதில் 40 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.;

Update: 2023-05-28 20:44 GMT

தாளவாடி

ஆசனூரில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சூறாவளிக்காற்றால் மரம் முறிந்து கர்நாடக அரசு பஸ் மீது விழுந்தது. இதில் 40 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

ஆலங்கட்டி மழை

தாளவாடியை அடுத்த ஆசனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பகல் நேரங்களில் வெயிலும், மாலை நேரங்களில் மழையும் பெய்து வருகிறது.

இதேபோல் நேற்றும் காலை முதல் மதியம் 1 மணி வரை வெயில் வாட்டி எடுத்தது. பின்னர் மதியம் 1 மணிக்கு மழை தூற தொடங்கியது. இதைத்தொடர்ந்து சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழை 1.30 மணி வரை நீடித்தது.

பஸ் மீது மரம் விழுந்தது

சூறைக்காற்று காரணமாக சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூரை அடுத்த ஆற்றுப்பாலம் அருகே உள்ள மரம் முறிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கர்நாடக அரசு பஸ் மீது அந்த மரம் விழுந்தது. திடீரென பஸ்சின் மீது மரம் விழுந்ததால் அதில் இருந்த பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர்.

பயணிகள் உயிர் தப்பினர்

அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் அனைவரும் பஸ்சில் இருந்து பத்திரமாக கீழே இறங்கினர். மேலும் மரம் முறிந்து விழுந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் மூங்கில் மரம் ஒன்றும் அடியோடு சாய்ந்து விழுந்தது.

இதன்காரணமாக தேசிய ெநடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆசனூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதைத்தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

இதையடுத்து அதே கர்நாடக அரசு பஸ்சில், பயணிகள் மீண்டும் ஏறி மைசூரு சென்றனர்.

அந்தியூர்

இதேபோல் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரை, ஈரெட்டி, ஒந்தனை, தேவர்மலை, மடம், வெள்ளிமலை, தட்டக்கரை ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 3 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 4 மணி வரை நீடித்தது.

இதனால் ஈரெட்டி பள்ளத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

Tags:    

மேலும் செய்திகள்