அறச்சலூர் பகுதியில் அட்டகாசம் செய்யும் மர்ம விலங்கை பிடிக்க 10 இடங்களில் கூண்டு வைக்க வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
அறச்சலூர் பகுதியில் அட்டகாசம் செய்யும் மர்ம விலங்கை பிடிக்க 10 இடங்களில் கூண்டு வைக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.;
ஈரோடு
அறச்சலூர் பகுதியில் அட்டகாசம் செய்யும் மர்ம விலங்கை பிடிக்க 10 இடங்களில் கூண்டு வைக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
மர்ம விலங்கு
ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு ெமாடக்குறிச்சி தாலுகாவுக்குட்பட்ட அறச் சலூர் அருகே உள்ள பழையபாளையம், ஊஞ்சப்பாளையம், வெள்ளிவலசு, வேமாண்டாம்பாளையம், ஓம் சக்தி நகர், சங்கரன்காடு, அட்டவணை அனுமன்பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
அறச்சலூர் நாகமலை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் எங்கள் கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். நாங்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு சார்ந்த தொழில் செய்கிறோம்.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி வெள்ளிவலசு பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் தனது தோட்டத்தில் கட்டி வைத்திருந்த பசு மாட்டை மர்ம விலங்கு தாக்கி கொன்றது. அதன் பின்னர் 4 நாட்கள் கழித்து ஓம்சக்தி நகரில் சண்முகசுந்தரம் என்பவர் பட்டியில் அடைத்து வைத்திருந்த பசு மாட்டை மர்ம விலங்கு கடித்து கொன்று இழுத்து சென்றது.
10 இடங்களில்...
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் நாங்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளோம். இதுகுறித்து ஆய்வு செய்த வனத்துறையினர், சிறுத்தைப்புலிகளின் கால் தடம் போன்று உள்ளதாக கூறி, 2 இடங்களில் அதனை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். அது போதுமானதல்ல. குறைந்தபட்சம் 10 இடங்களிலாவது கூண்டு வைத்து அட்டகாசம் செய்யும் மர்ம விலங்கை பிடிக்க வேண்டும். வனத்துறையினர் கூறுவதுபோல் அது சிறுத்தைப்புலியாக இருந்தால் ஆபத்தானதாகும். எனவே மனிதர்களை தாக்கும் முன்பு அதனை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.