அந்தியூரில், சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் தகராறு; ஓட்டல் ஊழியருக்கு கத்திக்குத்து- 2 வாலிபர்கள் கைது
அந்தியூரில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் ஓட்டல் ஊழியர் கத்தியால் குத்தப்பட்டார். இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;
அந்தியூர்
அந்தியூரில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் ஓட்டல் ஊழியர் கத்தியால் குத்தப்பட்டார். இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
கத்திக்குத்து
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 50). இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் தங்கியிருந்து பவானி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சமையலராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இங்கு 2 வாலிபர்கள் வந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது ஓட்டலில் காசாளர் வெளியே சென்றிருந்தார்.
இதனால் தங்கமணி அவர்களிடம் சாப்பிட்டதற்கு பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், காசாளர் வந்த பிறகு கொடுக்கிறோம். அவசரப்படாதீர்கள் என்று கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்கும், தங்கமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தங்கமணியை குத்தியுள்ளார். மேலும் 2 பேரும் சேர்ந்து தங்கமணிக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர்.
2 பேர் கைது
காயம் அடைந்த தங்கமணியை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே இதுபற்றி அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஓட்டலில் தகராறில் ஈடுபட்ட 2பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள் பவானி அருகே உள்ள எலவமலையை சேர்ந்த அருண்பிரசாத் (25), சேலம் மாவட்டம் பூசாரிபட்டியை சேர்ந்த நந்தகுமார் (29) என்பதும், இவர்கள் அந்தியூர் பகுதியில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து தங்கமணியை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக அவர்கள் 2பேரையும் போலீசார் கைது செய்தனர்.