கொடுமுடி அருகே விபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் சாவு
கொடுமுடி அருகே நடந்த விபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் இறந்தாா்;
கொடுமுடி அருகே உள்ள தெற்கு புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அப்புகுட்டி (வயது 56). இவர் கடந்த 2019-ம் ஆண்டு மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றினார். இந்த நிலையில் விருப்ப ஓய்வு பெற்ற அப்புகுட்டி விவசாயம் பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 32 வயதில் மகளும், 26 வயதில் மகனும் உள்ளனர்.
அப்புகுட்டி சம்பவத்தன்று இரவு 9.30 மணி அளவில் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது தாமரைபாளையத்தில் இருந்து ஒத்தக்கடை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அப்புகுட்டி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அப்புகுட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் விபத்து ஏற்படுத்திய வாகனம் பதிந்துள்ளதா? எனவும் சோதனை செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.