காயல்பட்டினத்தில் மினி லாரியில்ரூ.10 லட்சம் பீடி இலை சிக்கியது
காயல்பட்டினத்தில் மினி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் பீடி இலை சிக்கியது.;
ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்தில் ரூ.10 லட்சம் பீடி இலையுடன் மினிலாரி சிக்கியது. அவை இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மினிலாரி
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரை பகுதியான தேங்காய் பண்டகசாலை செல்லும் பகுதியில் நேற்று ஒரு மினி லாரி சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்தது.
இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
ரூ.10 லட்சம் பீடி இலை
அப்போது, மேற்கண்ட பகுதியில் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டு இருந்த மினிலாரி நின்றது. மினி லாரியின் கதவை திறந்து பார்த்த போது டிரைவர் யாரும் இல்லை. மினி லாரியை சுற்றிலும் ஒருவரும் இல்லை.
பின்னர் போலீசார் மினிலாரியின் பின்பகுதியில் ஏறி சோதனை செய்தனர். அதில் ஏராளமான பண்டல்கள் இருந்தது. அதை பிரித்து பார்த்த போது அனைத்து பீடி இலைகள் என்பது தெரியவந்தது. மொத்தம் 4 டன் பீடி இலைகள் இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து மினி லாரி, பீடி இலைகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இலங்கைக்கு கடத்த முயற்சியா?
பீடி இலைகள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக கொண்டு வரப்பட்டதா?, அதை காயல்பட்டினத்திற்கு கொண்டு வந்த மர்மநபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதோடு அவர்களை வலைவீசியும் தேடி வருகிறார்கள்.
கைப்பற்றப்பட்ட மினி லாரி, பீடி இலைகளை தூத்துக்குடி சுங்க இலாகா அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.