கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

செங்கம் அருகே கார்- லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

Update: 2023-10-15 17:50 GMT

செங்கம்

செங்கம் அருகே கார்- லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

பெங்களூருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40), சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி காவியா(35). இவரது மகன்கள் சர்வேஸ்வரன் (6), சித்து (3).

கோவிலுக்கு வந்தனர்

மகாளய அமாவாசையை முன்னிட்டு சதீஷ்குமார் தனது குடும்பத்தினருடன் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் இவர்கள் மற்றும் காவியாவின் தந்தை சீனிவாசன் (60), தாயார் மலர் (53), சகோதரர்கள் மணிகண்டன் (37), ஹேமந்த்குமார் (32) ஆகியோரும் ஒரு காரில் மேல்மலையனூர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் நேற்று காலை அவர்கள் ெபங்களூருவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை காவியாவின் தம்பி மணிகண்டன் ஓட்டினார்.

கார் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே நேற்று காலை 8 மணி அளவில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அந்தனூர் என்ற இடத்தின் அருகே கார் சென்றபோது எதிரே சிங்காரப்பேட்டை பகுதியில் இருந்து வந்த லாரியும் இவர்கள் சென்ற காரும் திடீரென நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாயின.

7 பேர் பலி

அப்போது ஏற்பட்ட சத்தம் அந்த பகுதியையே அதிரவைத்தது. விபத்தை பார்த்ததும் அந்த பகுதியில் இருந்தவர்களும், அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களும் விபத்து நடந்த இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட தொடங்கினர்.

தகவல் அறிந்த செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர்.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. விபத்தில் காவியாவை தவிர மற்ற 7 பேரும் காருக்குள்ளேயே இறந்து கிடந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காவியாவை போலீசார் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

டிரைவர்-கிளீனர் தப்பி ஓட்டம்

காரை ஓட்டிய மணிகண்டன் அசதியுடன் இருந்ததால் எதிரே வந்த வாகனத்தை கவனிக்கவில்லை. இதனால்தான் காரை ஒதுக்குவதற்கு முன்பு அதன்மீது லாரி மோதியது விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே விபத்து நடந்ததும் லாரியிலிருந்து டிரைவர் மற்றும் கிளீனர் தப்பி ஓடிவிட்டனர்.

விபத்து குறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் இறந்த சதீஷ்குமாரின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை கிராமமாகும்.

கார்-லாரி மோதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்தில் இறந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.2 லட்சம் இழப்பீடும், படுகாயம் அடைந்த காவியாவுக்கு ரூ.1 லட்சமும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்