கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை - மதுரை ஐகோர்ட்டு கிளை கருத்து

கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி ஒருவரையாவது சிறைக்கு அனுப்பினால் தான் சரியாக இருக்கும் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.;

Update: 2023-07-19 13:14 GMT

மதுரை,

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம் என்பவர் கல்வித்துறை சார்ந்த வழக்கு ஒன்றை மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தனர். ஆனால் அந்த உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஞானபிரகாசம் கடந்த 2020-ம் ஆண்டு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது, கோர்ட்டு உத்தரவை பின்பற்றாதது ஏன்? என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, ஏற்கனவே கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டதாகவும், அதையும் மீறி அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி ஒருவரையாவது சிறைக்கு அனுப்பினால் தான் சரியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் அது தவறான முன்னுதாரணமாக ஆகி விடும் என்று கூறினார். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு அதற்கு எதிரான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடுவதை ஏற்க முடியாது என்றும் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்