சொத்து வரியுடன் சேர்த்து குப்பைக்கும் வரி விதிப்பு

கோவை மாநகராட்சியில், சொத்து வரியுடன் சேர்த்து குப்பைக்கும் தனியாக வரி வசூலிக்கப்படுகிறது. இதனால் கட்டிட உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.;

Update: 2022-10-07 18:45 GMT

கோவை மாநகராட்சியில், சொத்து வரியுடன் சேர்த்து குப்பைக்கும் தனியாக வரி வசூலிக்கப்படுகிறது. இதனால் கட்டிட உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

சொத்துவரி உயர்வு

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் சொத்து வரிக்கு ஏற்றாற்போல் குப்பைக்கும் வரி விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.50 வரை குப்பை வரி விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த வரி, தூய்மை இந்தியா திட்டத்திற்காக (சுவஜ் பாரத்) விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே சொத்துவரி, மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. தற்போது குப்பைக்கும் வரி வசூலிப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

அதிகாரிகளிடம் முறையிடலாம்

நுகர்வோர் அமைப்பு கதிர்மதியோன்:-

தூய்மை இந்தியா திட்டத்திற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொத்து வரியுடன் சேர்த்து குப்பை வரி அமல்படுத்தப்பட்டது. ஆனால் அது சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அது மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கட்டிட உரிமையாளர்கள் செலுத்தும் சொத்து வரிக்கு ஏற்ப குப்பை வரி நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.120 முதல் அதிகபட்சம் ரூ.500 வரை பொதுமக்கள் குப்பை வரியாக செலுத்த வேண்டி உள்ளது. இதன் மூலம் குப்பை அள்ள மாநகராட்சி பொறுப்பு ஏற்று இருக்கிறது. எனவே வீதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தால் பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட முடியும்.

பாதிப்பு அதிகம்

சங்கீதா (ஜி.என்.மில்):-

சொத்து வரி, மின்கட்டண உயர்வுடன் தற்போது குப்பை வரியும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்தினரே அதிகமாக பாதிக்கின்றனர். வீடு மற்றும் கட்டிட உரிமையாளர்கள் இந்த தொகையை வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் தான் வசூலிப்பார்கள். இதனால் மாத சம்பளதாரர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும். எனவே குப்பை வரி விதிப்பை கைவிட வேண்டும்.

குப்பைகளை அள்ள வேண்டும்

துரை (வடவள்ளி):-

குப்பை வரியாக ஒரு வீட்டிற்கு மாதம் ரூ.10 அல்லது ரூ.50 கொடுப்பது தவறு இல்லை. ஆனால் மாநகரில் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

குறிப்பிட்ட சில வீதிகள் மற்றும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி களில் மட்டுமே குப்பைகள் முறையாக அள்ளப்படுகிறது. பின்தங்கிய மக்கள் வசிக்கும்இடங்களில் குப்பைகள் சரியாக அகற்றப்படுவது இல்லை.

எனவே வரி விதிப்பில் அக்கறை காட்டும் மாநகராட்சி குப்பை அள்ளுவதிலும் அக்கறை காட்ட வேண்டும்.

மேலும் செய்திகள்