கைத்தறிக்கும், விசைத்தறிக்கும் முக்கியத்துவம் கொடுப்பது தி.மு.க. அரசு தான்;ஈரோட்டில் அமைச்சர் ஆர்.காந்தி பேட்டி
கைத்தறிக்கும், விசைத்தறிக்கும் முக்கியத்துவம் கொடுப்பது தி.மு.க. அரசு தான் என்று ஈரோட்டில் அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.;
கைத்தறிக்கும், விசைத்தறிக்கும் முக்கியத்துவம் கொடுப்பது தி.மு.க. அரசு தான் என்று ஈரோட்டில் அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.
தீவிர பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஈரோடு மரப்பாலம் பகுதியில் நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் முதல்-அமைச்சரின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி கை சின்னத்திற்கு வாக்குகள் திரட்டினார். அப்போது பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
முதல் -அமைச்சர் மீது நம்பிக்கை
முன்னதாக அமைச்சர் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகிறது. அதில் 4 மாதங்கள் கொரோனா காலம். மீதமுள்ள காலங்களில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியில் 75 சதவீத வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றி உள்ளார். இதனால் அவர் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.
முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றை சொன்னால் அதை கண்டிப்பாக நிறைவேற்றி கொடுப்பார் என்று மக்கள் நம்புகின்றனர். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள மக்கள் கை சின்னத்துக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். எனவே அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவது உறுதி.
75 சதவீத வாக்குறுதிகள்
கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தார்கள் என்று கூறுங்கள். கடந்த 20 மாதங்களில் தி.மு.க. அரசு என்ன செய்யவில்லை என்றும் கூறுங்கள். அதற்கு நானே பதில் கூறுகிறேன். கைத்தறிக்கும், விசைத்தறிக்கும் முக்கியத்துவம் கொடுப்பது தி.மு.க. அரசு தான்.
மறைந்த முன்னாள் முதல் -அமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் பெரியார் ஆகியோர் என்ன நினைத்தார்களோ அதை தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து கொண்டு இருக்கிறார். இந்தியாவிலேயே மிகச்சிறந்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
இவ்வாறு அமைச்சர் காந்தி கூறினார்.