சுந்தர நாயகி அக்னீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு

பொறையாறு அருகே நல்லாடை கிராமத்தில் சுந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர் கோவிலில் வருகிற 25-ந் தேதி குடமுழுக்கு நடக்கிறது.

Update: 2023-05-14 18:45 GMT

பொறையாறு:

பொறையாறு அருகே நல்லாடை கிராமத்தில் சுந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர் கோவிலில் வருகிற 25-ந் தேதி குடமுழுக்கு நடக்கிறது.

அக்னீஸ்வரர் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம்,பொறையாறு அருகே நல்லாடை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுந்தர நாயகி சமேத அக்னீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் பரணி நட்சத்திர பரிகாரம் பெற்ற சிறப்பு மிக்க தலம் ஆகும். அக்னீஸ்வரர் சாமிக்கு மேற்கு திசை நோக்கியும் சுந்தரநாயகி சாமிக்கு தெற்கு திசை நோக்கியும் சன்னதிகளுக்கு செல்ல தனித்தனியாக இரண்டு வழிகளை கொண்ட சிறப்பு மிக்க திருத்தலம் ஆகும்.

மார்கண்டேயரை பெற மிருகண்ட மகரிஷி தவமிருந்த தலம், சோழ மன்னனுக்கு பிரமஹத்தி தோஷம் நிவர்த்தியான தலம். அர்த்தநாரீஸ்வரர் அமர்ந்த கோலத்தில் இருப்பது கோவிலின் தனி சிறப்பு. இத்தலத்தில் மூலவராக அக்னீஸ்வரர் சுந்தரநாயகியும் மற்றும் வினாயகர், முருகன், லெட்சுமி, சரஸ்வதி, மகாவிஷ்ணு, சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சனீஸ்வரர், துர்கை அம்மன், சண்டீகேஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர் ஆகிய சாமிகள் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

பாலாலயம்

தல விருச்ச மரமாக வன்னிமரம் விளங்கி வருகிறது. இப்படி பல்வேறு சிறப்பு மிக்க இக்கோவிலில் கடந்த 1999-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடமுழுக்கு செய்ய திட்டமிட்டு சீசெல்சு நாட்டின் தொழிலதிபர் நல்லாடை டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது சகோதரர்கள் பெரும் முயற்சியால் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது.

தொடர்ந்து திருப்பணிக்குழு நிர்வாகி மதிவாணன், கோவில் ஆய்வாளர் கண்ணதாசன், செயல் அலுவலர் முருகேசன், இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் திருப்பணி குழுவினர், கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் முன்னிலையில் 14.02.2022 அன்று ஹோமம், பூஜைகளுடன் திருப்பணி(பாலாலயம்) வேலைகள் தொடங்கப்பட்டது.

குடமுழுக்கு விழா

பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள், யாகசாலை அமைக்கும் பணி ஆகியவை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் புதிய கொடிமரம் நிலைநிறுத்தப்பட்டது. குடிநீர், மின்சாரம், உள்ளிட்ட பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

திருப்பணி வேலைகள் நிறைவு பெற்ற நிலையில் வருகின்ற 25-ந்தேதி(வியாழக்கிழமை) காலை 11.30 மணியளவில் மகாகுடமுழுக்கு விழா நடக்கின்றது. விழா ஏற்பாடுகளை டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது சகோதரர்கள், திருப்ணி குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்