மின் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

மாதம் ஒருமுறை மின் பயன்பாட்டைக் கணக்கிட்டு,கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2022-09-10 13:35 GMT

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்கள், சிறு, குறுந் தொழில் துறையினர், அரசியல் கட்சியினர் என அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் மின் கட்டண உயர்வை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

2026-27 வரை இக்கட்டண உயர்வு அமலில் இருக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. பெயரளவுக்கு கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தி, எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி மக்களுக்கு 'ஷாக்' கொடுத்துள்ளனர்.

ஏற்கெனவே, எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால் தினசரி வாழ்வையே நகர்த்த முடியாமல் திணறும் மக்களை மின் கட்டண உயர்வு நிலைகுலையச் செய்துள்ளது.

மின் வாரியத்தில் ஊழல், முறைகேடுகளைத் தடுத்து, நிர்வாகச் சீரமைப்பு மூலம் நிதிநிலையைச் சரிசெய்யாமல், கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றுவது அநீதி. உடனடியாக மின் கட்டண உயர்வை வாபஸ் பெறுவதுடன், மாதம் ஒருமுறை மின் பயன்பாட்டைக் கணக்கிட்டு,கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்