கள்ளச்சாராய விவகாரம்; முதல்-அமைச்சர் எதற்காக பதவி விலக வேண்டும்? - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி

கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்-அமைச்சர் எதற்காக பதவி விலக வேண்டும்? என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2024-06-23 01:13 GMT

சென்னை,

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று கேட்பதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்தவித தகுதியும் கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-

"கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கேட்பது அர்த்தமில்லாத வாதம். இதைக் கேட்பதற்கு எதிர்கட்சி தலைவருக்கு எந்தவிதமான தகுதியும் கிடையாது. முதல்-அமைச்சர் எதற்காக இதற்கு பதவி விலக வேண்டும்?

எதிர்கட்சிகள் அரசின் மீது குற்றம்சாட்டுவது வழக்கமானதுதான். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு வருகிறது. கொலைக் குற்றங்களும் திருட்டு சம்பவங்களும் நடந்து கொண்டேதான் இருக்கும். அதை தடுப்பதுதான் அரசின் கடமை. அதை தி.மு.க. அரசு ஒழுங்காக செய்து வருகிறது.

கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் போல் இனிமேல் எதுவும் நடக்காதவாறு தி.மு.க. அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். இந்த அரசு தமிழக மக்களின் நலனுக்கு உகந்ததாக செயல்படுமே தவிர, மக்களின் நலனுக்கு எதிராக செயல்படாது.

கள்ளச்சாராய விவகாரத்தில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் எந்த தண்டனையும் சந்திக்க தயார் என்று சொல்லியிருக்கிறார்கள். அவ்வாறு நிரூபிக்கப்படாவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடரப்படும்."

இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்