இளையான்குடியில் மழை வேண்டி முளைப்பாரி திருவிழா
இளையான்குடி அருகே உள்ள குமாரக் குறிச்சி பொதுமக்கள் மழை வேண்டி முளைப்பாரி திருவிழா நடத்தினர்.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள குமாரக் குறிச்சி கீழத்தெரு பொதுமக்கள் மழை வேண்டி முளைப்பாரி திருவிழா நடத்தினர். கிராம பொதுமக்கள் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலுக்கு காப்புக் கட்டி, விரதம் இருந்தும், நேர்த்தி கடன் செலுத்தியும் மழை வேண்டி முளைப்பாரி எடுத்து திருவிழா கொண்டாடினர். ஒயிலாட்டம், கும்மியடி ஆட்டம், கரகாட்டம் ஆடி முளைப்பாரிகளை பெண்கள் தலையில் சுமந்து முக்கிய வீதிகள் வழியே எடுத்து வந்து தேவர் சிலை, விநாயகர் கோவில், அய்யனார் கோவில், முருகன் கோவில், ராக்கட்சி அம்மன் கோவில் ஆகிய இடங்களில் வைத்து ஒயிலாட்டம், கரகாட்டங்கள் ஆடி ஊரில் அமைந்துள்ள குளத்தில் கரைத்தனர். ஸ்ரீமுத்துமாரி அம்மன் கோவில் பூசாரி முத்து வேளாளர் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடத்தி வழிபாடுகள் செய்தார். காரிமுத்து, சுப்பிரமணி பூசாரிகள் கரகம் எடுத்து ஆடி வந்தனர். மேலும் ஒயிலாட்டம், கும்மியடி ஆட்டங்கள் நடந்தது. குமாரக்குறிச்சி இளைஞர்கள் குழு, கீழத்தெரு கிராம மக்கள் திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.