காங்கயம் பகுதியில் வெயில் அதிகரித்து வருவதால் தற்போது இளநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது.
கடும் வெயில்
காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு வேலைகளுக்காக பகல் நேரங்களில் வெளியே வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் வெப்பத்தை தணித்துக்கொள்ள தண்ணீரையும், நிழல் தரும் மரங்களையும் தேடிச்செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இளநீர் விற்கும் கடைகளை நோக்கி பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் தற்போது இளநீர் விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இளநீர் விற்பனை நெடுஞ்சாலை ஓரங்களில் குடில்கள் அமைத்து அதிக அளவில் விற்பனை நடைபெற்று வருகிறது.
மகிழ்ச்சி
நெடுந்தொலைவில் இருந்து கார், கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வெயில் காலங்களுக்கு ஏற்ற இளநீரை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். இளநீர் விற்பனையும் அதிகரித்து உள்ளது. இதனால் இளநீர் விற்கும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.