செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் 'ரோபோ' சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் கண்டுபிடிப்பு
குடிநீர், கழிவுநீர் குழாய் பிரச்சினையை சரிசெய்ய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் ரோபோவை சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.;
சென்னை,
நகர்ப்புறத்தை உள்ளடக்கிய பகுதிகளில் கழிவுநீர், குடிநீர் குழாய் பிரச்சினைகள் அவ்வபோது பெரிய தலைவலியை கொடுக்கும். அந்த நேரத்தில் பிரச்சினைக்கான இடத்தை கண்டறிந்து அதனை சரி செய்வது என்பது பெரிய சவாலாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கில் சென்னை ஐ.ஐ.டி.யின் ஆராய்ச்சி உருவாக்கும் மையத்தின் மாணவர்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம் குடிநீர், கழிவுநீர் குழாய்கள் எந்த அளவில் இருந்தாலும், அதற்குள் இந்த ரோபோவை அனுப்பி எந்த இடத்தில் என்ன பிரச்சினை இருக்கிறது? அதனை எவ்வாறு சரி செய்ய முடியும்? என்பதற்கான தீர்வை வழங்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
குழாய் வழியாக அனுப்பப்படும் ரோபோ அதில் உள்ள அனைத்து விஷயங்களையும் துல்லியமான வீடியோவாக எடுத்து அதனை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு தெரிவிக்கும். அந்த தொழில்நுட்பம் அதற்கு என்ன மாதிரியான தீர்வை வழங்கலாம் என ஆலோசனையை வழங்கும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு 'ஸ்வஸ்த்' என்றும், ரோபோட்டுக்கு ''என்டோபோட் சிவர்'' என்றும் பெயரிட்டு இருக்கின்றனர். கழிவுநீர் மேலாண்மைக்காக இதுபோன்ற மைக்ரோ ரோபோக்களையும் உருவாக்க திட்டமிட்டு, அதனை வெற்றிகரமாக செய்து அரசு நிறுவனங்களிடமும் நிரூபித்து காட்டியுள்ளனர்.
துல்லியமானதாக இருக்கும்
இவ்வகையான தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோவை பயன்படுத்துவதால், நேரம், செலவு சேமிக்கப்படுகிறது எனவும், குறைபாடுகளை கண்டறிவதிலும், உடல் உழைப்புகளை குறைக்கும் வகையிலும் இந்த கண்டுபிடிப்பு பேருதவியாக இருக்கும்.
இந்த ரோபோ குழாய்களில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய உதவுவதோடு, குழாய்கள் தொடர்பான ஆய்வு தரவுத்தளத்தையும் தருகிறது. தரவுகளின் அடிப்படையில் கிடைக்கப்படும் தகவல்கள் மிகத் துல்லியமானதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.