ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்-எச்.ராஜா பேட்டி
ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என எச்.ராஜா கூறினார்.
பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டை திலகர் திடலில் பா.ஜனதா சார்பில் நேற்று கபடி போட்டி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் வேட்டியை மடித்து கட்டி, களத்தில் இறங்கி கபடி ஆடினார். பா.ஜனதா மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பனுடன் அவர் மல்லுக்கட்டினார். இது அங்கிருந்தவர்களை உற்சாகமடைய செய்தது. இதையடுத்து, எச்.ராஜா நிருபர்களிடம் கூறுகையில், ''இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடருவோம். தி.மு.க. ஆட்சியில் சாலைகள் சரிவர போடப்படுவது கிடையாது. பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. இதை திசை திருப்புவதற்காக தான் ஆ.ராசாவை மு.க.ஸ்டாலின் தூண்டி விடுகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது'' என்றார்.