அரசு ஊழியர் விபத்தில் இறந்தால் ஓய்வூதியத்தையும் கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
விபத்தில் சிக்கி அரசு ஊழியர் இறந்தால் அவரது ஓய்வூதியத்தையும் கணக்கிட்டு அவருடைய குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
விபத்தில் சிக்கி அரசு ஊழியர் இறந்தால் அவரது ஓய்வூதியத்தையும் கணக்கிட்டு அவருடைய குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அரசு ஊழியர் இறப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் வேளாண் துறையில் ஓவியர் மற்றும் புகைப்படக்காரராக பணியாற்றி, ஓய்வு பெற்றார். சொந்தமாக பிளக்ஸ் பேனர் கடை நடத்தி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டில் அவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது லாரி மோதிய விபத்தில் பலியானார். அவரது இறப்புக்கு இழப்பீடு கேட்டு குடும்பத்தினர் புதுக்கோட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அதன்பேரில் அவர்களுக்கு ரூ.11,28,217-ஐ இழப்பீடாக அறிவித்தது. ஆனால் சம்பவத்தின்போது கணேசன் கவனக்குறைவாக இருந்ததாக கூறி, இந்த இழப்பீட்டுத் தொகையில் இருந்து 20 சதவீதத்தை கழித்துக் கொண்டு ரூ.9 லட்சத்து 2 ஆயிரத்து 574-ஐ மட்டும் இழப்பீடாக வழங்கும்படி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்தும், இழப்பீட்டுத்தொகையை அதிகரிக்கக்கோரியும் மதுரை ஐகோர்ட்டில் கணேசனின் மனைவி பிரமிளா, அவரது மகன் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.
ஏற்புடையதல்ல
இந்த மனுவை நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார்.
அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் கணபதி சுப்பிரமணியன் ஆஜராகி, மனுதாரர் கணவர் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றதால் ஓய்வூதியம் பெற்றார். அந்த தொகையை கணக்கிட்டு, இழப்பீடு வழங்க வேண்டும் என ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி கீழ்கோர்ட்டு இழப்பீடு வழங்காதது ஏற்புடையதல்ல என்று வாதாடினார்.
ஓய்வூதியத்தையும் கணக்கிட வேண்டும்
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரரின் கணவர் இறந்ததால், அவரது வருமான இழப்பை கணக்கிடும் போது ஓய்வூதியத் தொகையை கழிப்பது சரியா? கீழ்கோர்ட்டு வழங்கிய இழப்பீடு நியாயமானதா? என்பதை மட்டுமே இங்கு பரிசீலிக்க வேண்டியுள்ளது. மனுதாரர் மனைவி தற்போது ரூ.22,802-ஐ பென்ஷனாக பெற்று வருகிறார். ஆனால் கீழ்கோர்ட்டு இதை கணக்கிடவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கீழ்கோர்ட்டு நடவடிக்கை சட்டவிரோதம்.
எனவே மனுதாரர் பெறும் ஓய்வூதிய தொகையையும் கணக்கிட்டு, விபத்து இழப்பீடாக மனுதாரருக்கு ரூ.21,72,948-ஐ வழங்கும்படி உத்தரவிடப்படுகிறது.
விபத்தின் போது மனுதாரர் கணவர் ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக இழப்பீட்டுத் தொகையில் 10 சதவீதத்தை மட்டும் கழித்துக் கொண்டு ரூ.19,55,653-ஐ மனுதாரர்கள் வங்கி கணக்கில் 4 வாரத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் டெபாசிட் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.