பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முழுமையாக முயற்சி செய்வேன்;ஈரோடு கலெக்டராக பொறுப்பேற்ற ராஜகோபால் சுன்கரா பேட்டி
பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முழுமையாக முயற்சி செய்வேன் என்று ஈரோடு கலெக்டராக பொறுப்பேற்ற ராஜகோபால் சுன்கரா கூறினார்.;
பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முழுமையாக முயற்சி செய்வேன் என்று ஈரோடு கலெக்டராக பொறுப்பேற்ற ராஜகோபால் சுன்கரா கூறினார்.
புதிய கலெக்டர் பொறுப்பேற்பு
ஈரோடு மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த கிருஷ்ணனுண்ணி, நிதித்துறை இணைச்செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சென்னை மெட்ரோபாலிட்டன் குடிநீர் வாரியத்தின் செயல் இயக்குனராக பணியாற்றி வந்த ராஜகோபால் சுன்கரா (வயது 33) ஈரோடு மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை ஈரோடு மாவட்ட கலெக்டராக ராஜகோபால் சுன்கரா பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம், கிருஷ்ணனுண்ணி பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று, கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் சப்-கலெக்டராக பணியில் சேர்ந்தேன். பின்னர் கடலூரில் கூடுதல் கலெக்டராகவும் (வளர்ச்சி), கோவை மாநகராட்சி ஆணையாளராகவும், கடைசியாக சென்னை குடிநீர் வாரியத்தின் செயல் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளேன்.
அரசின் நலத்திட்டங்கள்
ஈரோடு மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கும், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தந்தை பெரியார் பிறந்த மண்ணில், ஈரோடு மாவட்டத்தில் 35-வது மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுமக்களுடைய குறைகளை தீர்ப்பதற்கும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் முழுமையாக முயற்சி செய்வேன்.
தமிழக அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்களை சென்றடையவும், ஈரோடு மாவட்டத்தில் முக்கிய தொழில்களான விவசாயம், நெசவு மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்காக முழு முயற்சி செய்வேன். மேலும் பொதுமக்கள் தங்களின் குறைகளை எந்த நேரத்திலும் 0424 2260211 என்ற தொலைபேசி எண்ணிலும் அல்லது 97917 88852 என்ற வாட்ஸ் - அப் எண்ணிலும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறினார்.