சோதனைச்சாவடிகளில் லாரிகளை தடுத்து நிறுத்துவேன்

கேரளாவிற்கு சட்ட விரோதமாக கனிமவளங்கள் கொண்டு செல்வதை 20 நாட்களில் தடுக்காவிட்டால் பா.ஜ.க. தொண்டர்களுடன் சோதனைச்சாவடிகளில் லாரிகளை தடுத்து நிறுத்துவேன் என்று மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.;

Update: 2023-02-26 18:45 GMT

கிணத்துக்கடவு, 

கேரளாவிற்கு சட்ட விரோதமாக கனிமவளங்கள் கொண்டு செல்வதை 20 நாட்களில் தடுக்காவிட்டால் பா.ஜ.க. தொண்டர்களுடன் சோதனைச்சாவடிகளில் லாரிகளை தடுத்து நிறுத்துவேன் என்று மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில், கேரளாவிற்கு கனிமவளங்கள் கடத்தி செல்வதை கண்டித்து கோவையை அடுத்த கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசியதாவது:-

கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி பசுமையாக இருப்பதோடு, விவசாயம் நடைபெறும் பகுதிகள் ஆகும். இங்கு பூகம்பம் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 124 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள நல்லிபிள்ளி என்ற ஊரில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் பூகம்பம் ஏற்பட்டது. அதனால் ஒரே இரவில் 9 ஆயிரம் பேர் இறந்தனர்.

சாலைகள் சேதம்

சுதந்திரத்திற்கு பிறகு 73 ஆண்டுகளில் 50 அடி முதல் 70 அடி வரை கல் குவாரிகள் தோண்டி உள்ளோம். கடந்த 2 ஆண்டுகளில் குவாரிகள் 220 அடி வரை தோண்டப்பட்டு உள்ளது. பூமி கீழே தோண்ட, தோண்ட வெப்பம் மேலே வந்து கொண்டிருக்கும்.

ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட வரிகள் மூலம் தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ஆகும். ஆனால், கனிம வளம் மூலம் அரசு காட்டக்கூடிய வருமானம் ரூ.900 கோடி தான். 3 யூனிட் கொண்டு செல்லக்கூடிய லாரிகளுல் அதிக பாரம் ஏற்றி செல்வதால் சாலைகள் சேதம் அடைகின்றன.

கோழிக்கழிவு

கேரளாவில் ஆற்றில் திருட்டு மணல் எடுத்தால் அம்மாநில அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கிறது. கேரளாவுக்கு தேவையான கற்கள், ஜல்லி பொள்ளாச்சி, கோவை, கன்னியாகுமரியில் இருந்து தனியார் கம்பெனி மூலம் கேரளாவுக்கு செல்கிறது. கோழிக்கழிவு குப்பையை கொட்ட வேண்டும் என்றால் கூட, கேரளாவில் இருந்து பொள்ளாச்சி, பல்லடம் தான் வருகிறது.

தடுத்து நிறுத்துவேன்

கனிமவள கொள்ளையை நிறுத்தாவிட்டால் ஒவ்வொரு சோதனைச்சாவடியிலும் பா.ஜ.க. தொண்டர்களை நியமிப்போம். அவர்கள் கண்காணித்து கேரளாவுக்குள் செல்லக்கூடிய ஒவ்வொரு லாரியையும் தடுத்து நிறுத்தி, சோதனை செய்து ஊர் மக்கள் உதவியோடு சிறைபிடிப்போம்.

இன்னும் 20 நாட்களில் சட்ட விரோதமாக கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்காவிட்டால், பொள்ளாச்சியில் உள்ள 11 சோதனைச்சாவடிகளில் கேரளாவுக்கு கனிமவளங்களை கொண்டு செல்லும் லாரிகளை பா.ஜ.க. தொண்டர்களுடன் தடுத்து நிறுத்துவேன். எங்களை தாண்டி ஒரு லாரி இங்கிருந்து எப்படி கேரளா செல்கிறது என்று பார்த்து விடுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துகொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் மோகன் மந்தராசலம், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜன், விவசாய அணி மாநில துணைத்தலைவர் எம்.எம்.குமரேசன், மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்னு என்ற சாந்தகுமார், பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர்கள் தனபாலகிருஷ்ணன், சாந்தி சுப்பிரமணியம், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்