ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்வேன்

ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்வேன் என்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தோடர் இன மாணவி தெரிவித்தார்.

Update: 2023-06-16 20:15 GMT

ஊட்டி

ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்வேன் என்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தோடர் இன மாணவி தெரிவித்தார்.

நீட் தேர்வு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். கடந்த மே மாதம் 7-ந் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் 691 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். தொடர்ந்து கடந்த 13-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இதில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தோடர் பழங்குடியின மாணவி நீத்துசின் தேர்ச்சி பெற்று உள்ளார். நீத்துசின் நீட் தேர்வில் 145 மதிப்பெண்கள் எடுத்து உள்ளார். இதன் மூலம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் தோடர் பழங்குடியின மாணவி இவர் என்பது குறிப்படத்தக்கது. இதனால் தோடர் இன மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

பாராட்டு

நீலகிரி மாவட்டம் ஊட்டி கார்டன் மந்து பகுதியை சேர்ந்தவர் நார்ஷ்தோர் குட்டன். இவருடைய மனைவி நித்யா. இவர்களது மகள் நீத்துசின். இவர் அருவங்காடு கேந்திரிய வித்யாலா பள்ளியில் பிளஸ்-2 படித்து உள்ளார். பள்ளியில் படிக்கும் போதே மருத்துவம் படிப்பதற்காக நீட் பயிற்சி பெற்றார். முதல் முறை நீட் தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற்று உள்ளார்.

இதுகுறித்து மாணவி நீத்துசின் கூறியதாவது:-

தோடர் இனத்தில் இருந்து மருத்துவம் படிக்கும் முதல் மாணவியான நான் நீட் தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. மருத்துவம் படித்து ஏழை மக்களுக்கும், எனது சமுதாயத்துக்கும் சேவை புரிவதே எனது நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியை தோடர் இன ஊர் தலைவர்கள், பிரதிநிதிகள் பாராட்டினர். அப்போது அவர்களிடம் மாணவி ஆசி பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்