இருக்கும் இடம் தேடி வந்தது குடிநீர்...நீண்ட தூர அலைச்சலுக்கு நிம்மதி
நீலகிரி மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டம் மூலம் இருக்கும் இடம் தேடி வந்தது குடிநீர்... நீண்ட தூர அலைச்சலுக்கு நிம்மதி... கிடைத்து உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.;
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டம் மூலம் இருக்கும் இடம் தேடி வந்தது குடிநீர்... நீண்ட தூர அலைச்சலுக்கு நிம்மதி... கிடைத்து உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஜல் ஜீவன் திட்டம்
நாடு முழுவதும் ஊரக பகுதிகளில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி 2024-ம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின்படி கிராமப்புறங்களில் உள்ள தனி நபருக்கு ஒரு நாளைக்கு 50 லிட்டர் வரை தண்ணீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த குழாய் இணைப்பு, கிராமப்புற பொதுமக்களின் வீடுகள் அல்லது வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் அமைக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்தை இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு சமீபத்தில் விருது வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.
குடிநீர் பிரச்சினை இல்லை
பெங்கால்மட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரி:-
எங்களது தெருவில் பொது குழாய் மட்டும் இருந்ததால், பெரும்பாலான நேரங்களில் தண்ணீர் பிடிக்க கூட்டமாக இருக்கும். இதனால் வீட்டில் சமையல் தவிர்த்து, அதிகப்படியான நேரத்தை தண்ணீர் சேகரிப்பதில் விரயம் செய்ய வேண்டி இருந்தது. இதனால் வேறு வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் போனது. மேலும் சமவெளி பகுதிகளை போல மலைப்பகுதிகளில் தண்ணீரை தூக்கிக்கொண்டு செல்ல முடியாது.
தற்போது ஜல் ஜீவன் திட்டம் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதால், தண்ணீருக்காக நீண்ட நேரம் காத்திருந்த நிலை மாறிவிட்டது. இதனால் குடிநீர் தேடி அலைந்ததால், வீணான எங்களது பொன்னான நேரம் தற்போது சேமிக்கப்படுகிறது. மேலும் கூடுதல் சுமையை அதிக தூரம் தூக்கும் பிரச்சினையும் முடிந்து விட்டது. இந்த திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசுக்கும், அதை அமல்படுத்த நடவடிக்கை எடுத்த மாநில அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவருக்கும் சென்றடைய வேண்டும்
கொணவக்கரை எஸ்.என்.காலனியை சேர்ந்த பிரேமா:-
எங்களது கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. குடிநீருக்காக கூலி வேலைக்கு செல்ல முடியாமல் குடியிருப்புகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இயற்கை ஊற்றுகளில் இருந்து தண்ணீரை சேகரித்து, எடுத்து வந்து சிரமப்பட்டு வந்தோம்.
இந்தநிலையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கொணவக்கரை ஊராட்சி சார்பில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 38 வீடுகளுக்கு தனித்தனியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இதன் மூீலம் கடந்த பல ஆண்டுகளாக எங்களது கிராமத்தில் நிலவி வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு எட்டபட்டதால், எங்களது கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து உள்ளனர். பொதுவாக இருக்கும் இடம் தேடி வந்தது குடிநீர்...நீண்ட தூர அலைச்சல் நீங்கியதால் நிம்மதி கிடைத்துள்ளது. இருப்பினும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இந்த திட்டம் விரைவில் சென்றடைய வேண்டும்.
தடுப்பணை கட்ட...
பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் கிராம தலைவர் எம்.சின்னான் கூறியதாவது:-
காமராஜபுரம் கிராமத்தில் 250 வீடுகள் உள்ளது. இங்கு கம்பிசோலை அருகே உள்ள ஊற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. 2 தொட்டிகளில் நிரப்பப்பட்டு, பின்னர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் தற்போது கிராமத்தில் குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு தற்போதைய குடிநீர் ஆதாரமான ஊற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். அந்த தடுப்பணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படுவதால், குடிநீர் ஆதாரத்தில் தடுப்பணை கட்ட வேண்டியது மிகவும் அவசியம். தடுப்பணை கட்டப்படா விட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு காமராஜபுரம் குடிநீர் ஆதாரத்தில் தடுப்பணை கட்ட அரசு ஆவன செய்ய வேண்டும்.
மின் இணைப்பு வழங்குவதில் தாமதம்
கூடலூர் ஸ்ரீமதுரை ஸ்ரீஜா:-
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் சிறந்த திட்டம். ஸ்ரீமதுரை ஊராட்சியில் இதுவரை 800 பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஊராட்சிக்கு உட்பட்ட அச்சங்கொல்லியில் உள்ள எனது வீட்டுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இணைப்பு வழங்க விண்ணப்பித்தேன். இதேபோல் ஏராளமானவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில், ரூ.34 லட்சம் செலவில் குடிநீர் கிணறு, தொட்டி, குழாய்கள் பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால், இதுவரை மின் இணைப்பு வழங்காததால் இத்திட்டத்தின் கீழ் குடிநீர் கிடைப்பது தாமதமாகி வருகிறது. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை விளக்கம் கேட்கப்பட்டது. மின்வாரியத்திடம் போதிய தளவாட பொருட்கள் இல்லாததால் புதிய மின் இணைப்புகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக பதில் அளிக்கின்றனர். எனவே, மின் இணைப்பு வழங்கி திட்டத்தின் பயன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.