நம் வரலாற்றை அடுத்த தலைமுறையினரிடம் நகர்த்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழில் எப்போதும் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து வகுப்பில் முதல் மாணவனாக வருவேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.;
சென்னை,
சென்னை இலக்கிய திருவிழா 2023-ஐ முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான இலக்கிய போட்டிகள், பயிற்சி பட்டறைகள் தொடக்க விழா அண்ணாநகர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
சென்னை இலக்கியத் திருவிழா வரும் 6-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை 3 நாட்கள் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் 100 இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில், பல்வேறு அமர்வுகளில் பங்குபெறுகிறார்கள்.
தமிழகத்தின் கலை இலக்கிய வரலாற்றையும் நம் பண்பாட்டையும் அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச்சென்று அவர்கள் மூலம் அதை உலகம் அறியச் செய்வதற்கான இந்த முயற்சி நிச்சயமாக வெற்றிபெறும். கழகத்தில் இளைஞர் அணி செயலாளராகவும், இளைஞர் நலன் சார்ந்த அமைச்சராகவும் இருப்பதால் நம் வரலாற்றை, கலையை, பண்பாட்டை அடுத்தத் தலைமுறையினரிடம் நகர்த்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.
மிகச் சிறந்த பத்திரிகையாளர், நாடக நடிகர், திரைக்கதை ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், பத்திரிகை ஆசிரியர், மிகச்சிறந்த பேச்சாளர் என பன்முக திறமை கொண்ட மிகப்பெரிய ஆளுமையான கலைஞரின் வழியில் வந்தவன், அந்தக் கழகத்தில் இருந்து வந்தவன் என்ற முறையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. இதில் கலந்து கொள்வதால் பெருமையும் கொள்கிறேன்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை வைத்துக்கொண்டு இதைச் சொல்கிறேன். நான் பள்ளியில் படிக்கும்போது எல்லா பாடங்களிலும் சராசரி மார்க் தான் எடுத்தேன். ஆனால் தமிழில் எப்போதும் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து வகுப்பில் முதல் மாணவனாக வருவேன். அதற்கு காரணம் முத்தமிழறிஞர்.
சிறுவயதில் இருந்தே அவரின் எழுத்துக்களையும், முரசொலியையும் படித்து வளர்ந்ததால் இயல்பிலேயே தமிழார்வம் உண்டு. தென் தமிழகத்தின் அறிவு மாற்றத்திற்காக மதுரையில் ரூ.114 கோடி மதிப்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் மிகப்பெரிய நூலகத்தை உருவாக்கி வருகிறார் நம்முடைய முதல்-அமைச்சர் விரைவில் அந்த நூலகமும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
நாங்களும் எங்களுடைய இளைஞர் அணி அலுவலகமான அன்பகத்தில் ஒரு சிறிய நூலகத்தை உருவாக்கியுள்ளோம். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த நூலகம் திறந்து இருக்கும். 4 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. ஆர்வமுள்ள இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு நடத்தும் இலக்கியத் திருவிழாக்கள் தமிழ் மக்களின் கொண்டாட்டத்துக்கு உரிய நிகழ்ச்சியாக கொண்டு செல்லப்பட வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமூக நீதியின் அடிப்படையான கொள்கை. அதை சரியாக செய்துவிட வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சரின் இடைவிடாத எண்ணம். அதை நோக்கித்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.