"தி.மு.க.வை ஆக்ரோஷமாக எதிர்ப்பவன் நான் மட்டுமே'' அண்ணாமலை ஆவேசம்

''தி.மு.க.வை ஆக்ரோஷமாக எதிர்ப்பவன் நான் மட்டும்தான்'' என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Update: 2023-01-04 23:03 GMT

சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில், தமிழக தலித் கட்சி தலைவர் தலித் குடிமகன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் நேற்று பா.ஜ.க.வில் சேர்ந்தனர்.

அதனைத்தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

விளக்கம் வேண்டும்

சென்னை விருகம்பாக்கத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் மீது 48 மணி நேரம் கழித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. சம்பவம் நடந்து 2 நாட்கள் கழித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரு பெண் காவலருக்கு இப்படிப்பட்ட அநியாயம் நடந்தும், உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு காவல்துறைக்கு என்ன நிர்ப்பந்தம் ஏற்பட்டது?. அமைச்சர்களின் அழுத்தம் காரணமா? என்பது குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

அதேபோல ஆர்.கே.நகரில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரி ஒருவரை அந்த தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. எபினேசர் கட்டாயப்படுத்தி சாக்கடையை சுத்தம் செய்ய வைத்திருக்கிறார். பாதிக்கப்பட்ட நபர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் ஆவார். எனவே இத்தகைய செயலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து, ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும். தி.மு.க., சாதி ஆதிக்கம் மிகுந்த கட்சி என்பது இதன்மூலம் தெளிவாக தெரிகிறது.

காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு

பா.ஜ.க.வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியிருக்கிறார். என் மீதும், கட்சி மீதும் குற்றம் சுமத்தாதவர் யார்? அதேபோலதான் இவரும். பழிசுமத்துவதும், விமர்சனங்கள் முன்வைப்பதும் நல்லதுதான். தி.மு.க.வை எப்போதுமே ஆக்ரோஷமாக எதிர்ப்பவன் நான் மட்டுமே.

எனவே விமர்சனங்களால் பா.ஜ.க. வளர்ந்து கொண்டிருக்கிறது. யார் என்ன சொன்னாலும், செய்தாலும் என் பதில் மவுனம்தான்.

கோவை ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்கு சென்று மாயமான பெண் சடலமாக மீட்கப்பட்டது குறித்து பலரும் விமர்சிக்கிறார்கள். எனவே இந்த விவகாரத்தில் காவல்துறை நேர்மையான விசாரணையை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும்.

மக்கள் ஐ.டி. எதற்கு?

எப்போதுமே பா.ஜ.க. மீது விமர்சனம் வைப்பது பலருக்கு அலாதி பிரியம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசத்தான் செய்வார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லக்கூடாது. சிலரது காலில் விழுந்தோ அல்லது ஆதாயம் தேடியோ நான் நல்ல பெயர் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களை தேடி அரசியல் செய்யும் எனக்கு, மற்றவர்களின் புகழாரம் தேவையில்லை.

தமிழகத்தின் கடன் வருடந்தோறும் எகிறிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவரது குடும்பத்துக்கும் தலா ரூ.2.63 லட்சம் கடன் இருக்கிறது. இந்தநிலையில் மக்கள் ஐ.டி. என்ற திட்டம் எதற்கு? ஆதார் செய்யாத வேலையை மக்கள் ஐ.டி. செய்ய போகிறதா? நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்பது கட்சி தலைவராக என் விருப்பம். ஆனால் முடிவு கட்சி மேலிடம் தான் எடுக்கும். அதேபோல எங்கள் கட்சியிலும் சரி, கூட்டணியிலும் சரி எந்த குழப்பமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

'ரபேல்' கைெகடிகாரத்தை நிருபரிடம் ஒப்படைத்த அண்ணாமலை

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று பேட்டியளிக்கும்போது, 'நீங்கள் அணிந்திருக்கும் கைெகடிகாரத்தில் 'பக்' (ஒட்டுக்கேட்பு கருவி), சென்சார் கருவிகள் இருப்பதாக குற்றச்சாட்டு வருகிறதே?', என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து அண்ணாமலை உடனடியாக தன் கையில் அணிந்திருந்த கைெகடிகாரத்தை கழற்றி ஒரு நிருபரிடம் கொடுத்து, "இந்த வாட்சை ஒரு நாள் முழுவதும் வச்சிருங்க. எந்த கடையிலும் கொடுத்து சோதனை செஞ்சுக்கோங்க... இதில் கேமரா, ஒட்டுக்கேட்கும் கருவி இருக்கா, இல்லையா? என சோதிச்சு பார்த்து தெரிஞ்சுக்கோங்க", என்று கூறினார். பின்னர் அந்த நிருபர் அண்ணாமலையிடம் கைெகடிகாரத்தை கொடுக்க, அதை வாங்கி கையில் கட்டிக்கொண்டார்.

அதேபோல பேட்டியின்போது பல இடங்களில் ஆவேசமான அண்ணாமலை, 'அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் தவிர, யூ-டியூப் சேனல் வைத்திருப்பவர்கள் யாரும் இனி கமலாலயம் வரக்கூடாது' என்று தனது நிர்வாகிகளிடம் கண்டிப்பான முறையில் தெரிவித்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்