பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவர் தற்கொலை

குத்தாலம் அருகே குடும்ப தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-30 15:24 GMT
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கீழப்பெரம்பூர் சித்தி விநாயகர் நகரை சேர்ந்தவர் அறிவழகன்(வயது 50). குடும்ப பிரச்சினை காரணமாக அறிவழகனை விட்டு விட்டு குழந்தைகளுடன் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். பின்னர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரேமா என்கிற ஜெயினா பீவியை(45) அறிவழகன், இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளாக வெளிநாட்டில் பணியாற்றிய அறிவழகன், கடந்த ஒரு ஆண்டாக சொந்த ஊரில் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

அரிவாள் வெட்டு-தற்கொலை

இந்தநிலையில் அறிவழகனுக்கும், ஜெயினா பீவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம்போல நேற்று முன்தினம் இரவும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அறிவழகன் தனது மனைவியை அரிவாளால் வெட்டினார். இதில் அவர் ரத்தக்காயத்துடன் கீழே கிடந்தார். இதனை பார்த்ததும் அறிவழகன் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் அறிவழகன் வீட்டுக்கு வந்த உறவினர்கள் ஜெயினா பீவி வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதையும், அறிவழகன் தூக்கில் தொங்கியதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயினா பீவியை மீட்டு சிகிச்சைக்காக உறவினர்கள் உதவியுடன் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.இறந்த அறிவழகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் விசாரணை
இதுகுறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த அறிவழகன் அரிவாளால் மனைவியை வெட்டியுள்ளார். இதில் ஜெயினா பீவி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியதைக்கண்டு பதற்றம் அடைந்த அறிவழகன், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்