ஆண் நண்பருடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட மனைவியை கத்தியால் தாக்கிய கணவன் கைது
ஆண் நண்பருடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட மனைவியை கத்தியால் தாக்கிய கணவனை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை அயனாவரம் என்.எம்.கே.தெருவை சேர்ந்தவர் சாலமன் (வயது 20). எலெக்ட்ரிசியன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி (19). வீட்டு வேலை செய்து வருகிறார். இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஈஸ்வரி தனக்கு தெரிந்த ஆண் நண்பருடன் இன்ஸ்டாகிராமில் சினிமா பாடல் பாடி வெளியிட்டு உரையாடி வந்ததாக கூறப்படுகிறது.
இதை கண்டு ஆத்திரமடைந்த சாலமன் ஈஸ்வரியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், சாலமன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து ஈஸ்வரியின் கை மற்றும் தலையில் தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட ஈஸ்வரி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சாலமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.