அறுவை சிகிச்சைக்கு பயந்து கணவன் - மனைவி தற்கொலை
செய்யாறு அருகே அறுவை சிகிச்சைக்கு பயந்து கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.;
செய்யாறு
செய்யாறு அருகே அறுவை சிகிச்சைக்கு பயந்து கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
அறுவை சிகிச்சை
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சட்டுவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜுலு (வயது 82). இவரது மனைவி தனலட்சுமி (74). இவர்களின் மகன் மற்றும் மகள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தனலட்சுமி வீட்டில் உள்ள கழிவறையில் தவறி கீேழ விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர்.
இந்த நிலையில் தனலட்சுமி, வரதராஜுலுவும் கீழ்புதுப்பாக்கம் பகுதியில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
கணவன்-மனைவி தற்கொலை
அங்கு தனலட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படி தெரிவித்தபோது, அதற்கு மறுப்பு தெரிவித்து அறுவை சிகிச்சை செய்தால் நான் பிழைக்க மாட்டேன் என பயத்துடன் புலம்பியுள்ளார்.
வரதராஜுலு ஆறுதல் கூறினாலும் அவரும் அச்சத்துடனே இருந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த தனலட்சுமி, வரதராஜுலு இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்ததாக கூறப்படுகிறது.
மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தனலட்சுமி மற்றும் வரதராஜுலு இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து உறவினர் ரவி கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.