குமரி மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நேற்று மனித சங்கிலி போராட்டம் குமரியில் பல்வேறு இடங்களில் நடந்தன.

Update: 2022-10-11 20:34 GMT

களியக்காவிளை,

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நேற்று மனித சங்கிலி போராட்டம் குமரியில் பல்வேறு இடங்களில் நடந்தன.

மனித சங்கிலி

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் இணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தை நேற்று தமிழகம் முழுவதும் நடத்தியது.

அதன் ஒரு பகுதியாக குழித்துறை சந்திப்பு பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு

போராட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில், மத்திய பா.ஜ.க. அரசு மதத்தின் பெயரால் மக்களை பிரிவினைப்படுத்தி வருவதை கண்டித்து அனைத்து கட்சிகள் இணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம் என்றார்.

மேலும் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ராகுல்காந்தி கட்சி தலைமையை ஏற்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்தார். அவரிடம் கட்சி நிர்வாகிகள் பலரும் தலைமையை ஏற்க கூறிய போது நான் மக்கள் பணிகளை பார்க்கிறேன். கட்சி பணிகளை காந்தி குடும்பத்தை தவிர்த்த ஒருவர் பார்க்கட்டும் என்றார். ராகுல்காந்தி பாதயாத்திரை மக்கள் மத்தியில் நல்ல எழுச்சியை ஏற்படுத்தியது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார்.

போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த குழித்துறை நகர்மன்ற முன்னாள் தலைவி டெல்பின், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரவிசங்கர், செல்வகுமார், ஸ்டூவர்ட் ரத்தினகுமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தக்கலை

இதேபோல் தக்கலையில் நடந்த போராட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் மாத்தூர் ஜெயன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார்.

இதில் காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ், துணைத்தலைவர் வக்கீல் ஜாண் இக்னேசியஸ், வட்டாரத் தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், நகர தலைவர் ஹனுகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பெருளாளர் செல்வம், தொகுதி செயலாளர் மேசியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் மாவட்ட செயலாளர் முருகேசன், வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்மின், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் ராஜு, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜே.பி.சிங் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தக்கலை பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை மனித சங்கிலியாக நின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்