பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த சம்பவங்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

Update: 2023-04-07 19:00 GMT

காலங்கள் கடந்தபோதும், நாகரிகங்கள் வளர்ந்தபோதும் பெண்களின் மீதான வன்முறைகளும், பாலியல் தாக்குதல்களும் குறைந்தபாடில்லை.

வரதட்சணை, தொடுதல், பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைக்கான முயற்சிகள் என பெண்களின் மீதான தாக்குதல்கள் என்பது நீண்டுகொண்டே செல்கின்றன.

பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு சென்றாலும் சொல்ல முடியாத துயரத்தை பெண்கள் அனுபவித்து வருகிறார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் குறித்தான புகார்கள் அதிகரித்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய மகளிர் ஆணையம் தகவலும் தெரிவித்திருந்தது.

பாலியல் குற்றங்கள்

இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள். ஆனால், பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போதும் வெளியே சொல்லப்பயப்படுகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் கணிசமாக அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி, கல்லூரிகளில்...

சமீப காலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த சம்பவங்களும், புகார்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு சிறு வயதில் இருந்தே பெண் பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது அவசியம் ஆகிறது.

இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

அரசு மனநல காப்பகத்தின் பேராசிரியரும், டாக்டருமான பூர்ண சந்திரிகா:- சிறு வயதில் இருந்தே பாலின சமத்துவம் என்றால் என்ன என்று சொல்லித்தர வேண்டும். பாலின சமத்துவத்தை நோக்கி நமது பயணம் இருக்க வேண்டும். சிறு வயதில் இருந்தே தொடுதலில் சரி எது? தவறு எது? என்பது குறித்து சொல்லித்தர வேண்டும். இதை வெளியில் சொல்வதற்கு அவர்களுக்கு தைரியத்தை கொடுக்க வேண்டும். மாணவி சோகமாக இருந்தால் என்ன நடந்தது என்று முதலில் கேட்க வேண்டும். அதை பக்குவமாக எதிர்கொள்ள வேண்டும். சமூக மாற்றத்திற்கான முதல் அடி வீட்டில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். பெண்ணையும், ஆணையும் சமமாக பார்க்கும் நிலை வந்துவிட்டாலே போதும் இந்த நிலை மாறும்.

பெண் தானே என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலை மாற வேண்டும். உடல் அமைப்பை கிண்டல் செய்தால் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்பது போல் பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள் மீதும் எதிர்த்து குரல் கொடுக்கும் மனநிலை மாணவிகளுக்கு வரவேண்டும். சில இடங்களில் வீட்டிலேயே பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடப்பதால் அதை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். எது நடந்தாலும் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். பெண் பிள்ளை தான் பாதிக்கப்பட்டது குறித்து வெளியே சொல்லி பின்னரும் அவருக்கு தொடர்ந்து பாதுகாப்பாக அரணாக நாம் இருக்க வேண்டும். மாணவர்கள் மட்டுமில்லாமல் ஆசிரியர்களுக்கும் உளவியல் ரீதியான வகுப்புகள் எடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல் பெண் குழந்தைகளுக்கு நடப்பது போல் ஆண் குழந்தைகளுக்கும் 18 சதவீதம் நடப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, இருவருக்கும் பாலியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

தமிழ்நாடு மாணவர்-பெற்றோர் நல சங்கத்தின் மாநில தலைவர் அருமைநாதன்:- உளவியல் ரீதியாக மாணவர்களை, ஆசிரியர்கள் எதிர்கொள்வது மட்டுமே இதற்கு தீர்வாக அமையும். ஒவ்வொரு பள்ளிக்கும், கல்லூரிக்கும் உளவியல் ஆசிரியர்களை அரசே நியமிக்க வேண்டும். தற்போது இருக்கும் மாணவர்கள் சின்ன அவமானத்தையோ, ஏமாற்றத்தையோ தாங்க முடியாத நிலையில்தான் வளர்கிறார்கள். ஒரு சின்ன அவமானம் ஏற்பட்டவுடன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் தான் இருக்கிறார்கள். பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ எந்த பிரச்சினை நடந்தாலும் அதை வெளியில் கொண்டுவருவதில்லை. ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் பிரச்சினையை சொன்னால் நம்மைத்தான் தவறாக நினைப்பார்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

பாலியல் குற்றங்களுக்கு தண்டனை மட்டுமே தீர்வு கொடுக்காது. தண்டனை கொடுத்தாலும் இதை சரிசெய்ய முடியாது. பாலியல் என்பது உளவியல் ரீதியான ஒன்று. சமுதாய மனநிலை மாறவேண்டும். பள்ளியில் இருந்தே மாணவ, மாணவிகளிடம் உளவியல் ரீதியாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாள்தோறும் உளவியல் ரீதியான விஷயங்களை பேச வேண்டும். அரசு செலவினம் பார்க்காமல் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு உளவியல் ஆலோசகரை ஆசிரியராக நியமிக்க வேண்டும். இதேபோல, மாணவர்களை எப்படி கையாள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். இதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். கோடை விடுமுறை நாட்களில் பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கும் இதுசம்பந்தமாக வகுப்புகளை எடுக்க வேண்டும். இதுபோன்ற வழிமுறைகள் மட்டுமே இதற்கு ஒரு தீர்வாக அமையும்.

குழந்தைகளுடன் உரையாடுதல்

தேனியை சேர்ந்த கல்வியாளர் காசிபிரபு:- அரசு சார்பில் பாலியல் குற்றங்களை தடுக்கவும், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு துறை இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. என்னதான் அரசு தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களிடம் ஒரு விழிப்புணர்வு வர வேண்டும். விழிப்புணர்வு மூலமே இதை தடுக்க முடியும். முந்தைய காலகட்டம் போன்று இப்போது இல்லை. எனவே, இப்போதைய காலங்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எப்படி இருந்தாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும். குழந்தைகளுடன் தினமும் உரையாட வேண்டும்.

பரபரப்பாக இருக்கிறோம், நிறைய வேலை இருக்கிறது என்று எல்லாம் பெற்றோர்கள் ஒதுங்கிச் செல்லக்கூடாது. உரையாடினால் தான் பிள்ளைகளிடம் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா? என்று தெரியவரும். இன்றைய குழந்தைகள், இளைய தலைமுறையினர் செல்போன் மூலம் நிறைய அறிந்து கொள்கிறார்கள். அவர்களை நல்வழிப்படுத்துதல், வாழ்வை நெறிப்படுத்துதல் போன்றவற்றை பெற்றோர்கள் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும். கல்வி நிலையங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. ஏதேனும் புகார்கள் என்றால் அதில் தயக்கமின்றி தெரிவிக்க வேண்டும். கோடை விடுமுறையின் போது மாணவர்களுடன் பெற்றோர்கள் நீண்ட நேரம் செலவிட முடியும். இந்த நேரத்தை பயன்படுத்தி பெற்றோர்கள் அவர்களிடம் பாலியல் கல்வி குறித்து பேசலாம். விழிப்புணர்வு அதிகரித்தால் தான் குற்றங்கள் குறையும்.

பாலியல் கல்வி விழிப்புணர்வு

தேனியை சேர்ந்த மனநல சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் ராஜேஷ்கண்ணன்:- பள்ளிப் பாதுகாப்பு திட்டம் தொடர்பாக ஒரு சர்வே வடமாநிலங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. 200 நகரங்களில் கிட்டத்தட்ட 1,650 குழந்தைகளிடம் பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு இருக்கிறதா? என்று அந்த சர்வே நடத்தப்பட்டது. 20 முதல் 30 சதவீதம் பேர் தான் விழிப்புணர்வு இருப்பதாக தெரிவித்தனர். 40 சதவீதம் குழந்தைகள் தங்களுக்கு தெரியவில்லை என்றனர். தெரியவில்லை என்பதை விழிப்புணர்வு இல்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். 30 சதவீதம் இல்லை என்றே சொல்லிவிட்டனர்.

வேலைசெய்யும் இடங்களிலோ அல்லது படிக்கும் இடங்களிலோ பாலியல் தொல்லை ஏற்பட்டால் புகார் அளிக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. 2012-ல் போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. இதுபோன்ற விழிப்புணர்வை அதிகம் ஏற்படுத்த வேண்டும். பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் தயக்கமோ, கூச்சமோ இன்றி வெளியே தெரிவிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ெபற்ேறார்கள் தங்களின் குழந்தைகளோடு நேரம் ஒதுக்கி பேச வேண்டும். குழந்தைகள் தெரிவிக்கும் கருத்துக்களை நம்ப வேண்டும். பிள்ளைகளின் செயல்பாட்டில் மாற்றம் இருந்தாலோ, தூக்கத்தில் பயந்து எழுவது, அப்பா, அம்மா கொஞ்சும் போது பயப்படுவது, தள்ளிவிடுவது போன்ற அறிகுறிகள் இருந்தாலோ அவர்கள் ஏதோ வகையில் பாதிக்கப்பட்டு இருக்கலாம். நல்ல கெடுதல், கெட்ட தொடுதல் குறித்து குழந்தைகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். வலி ஏற்படும் வகையிலான தொடுதல் ஏற்பட்டால் தான் கெட்ட தொடுதல் என்ற ஒரு பார்வை உள்ளது. வலி இல்லாமலும் தொந்தரவு கொடுக்கும் வகையிலான தொடுதலை ரகசிய தொடுதல் என்று சொல்லிக் கொடுக்கலாம். நேரடியாக மட்டுமன்றி சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்தும், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் குழந்தைகள், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் 33 சதவீதம் பேர் இளம் வயதினர். இங்கு பாலியல் கல்வி வேண்டுமா? என்று நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 70 சதவீதம் பெற்றோர்கள் வேண்டாம் என்றே பதில் அளித்துள்ளனர். எனவே, அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

புகார் பெட்டிகள்

எரணம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி ஆர்த்தி:- பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் அதை வெளியில் கூறினால் மரியாதைக்குறைவாக ஆகிவிடுமோ என்ற தயக்கத்தில் பலரும் கூறாமல் இருக்கலாம். பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பல இடங்களில் தலைமை ஆசிரியர்கள் அறை, முதல்வர் அறைக்குள் பெட்டிகள் இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படி இருந்தால் எப்படி தைரியமாக புகார் கொடுக்க முன்வருவார்கள். பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொந்தரவுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்பவர்களை பணி இடைநீக்கம், நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுடன் நண்பர்களாக பழக வேண்டும். நண்பர்களாக பழகினால் தான் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் முதல் ஆளாக ஓடி வந்து பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்ற மனநிலை உருவாகும். பாலியல் கல்வி கண்டிப்பாக அனைவருக்கும் தேவை. பெண் குழந்தைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்வதை காட்டிலும் ஆண் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று வளரும் போதே சொல்லி வளர்க்க வேண்டும்.

தற்காப்பு கலைகள்

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் தேனி மாவட்ட தலைவர் மோகன்:- பாலியல் கல்வி மாணவ, மாணவிகள் மத்தியில் கட்டாயம் தேவை. சமூக வலைத்தளங்களின் பாதிப்புகள் வேகமாகி வருகிறது. சமூக வலைத்தளங்களின் நன்மை, தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உளவியல் ஆலோசனைகள் வழங்க வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நேரங்களில் போலியான குற்றச்சாட்டுகளும் வர வாய்ப்புள்ளது. அதுபோன்ற குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச்சாட்டு போலியானது என்று நிரூபிக்கப்பட்டால் குற்றம் சுமத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். மனநல ஆலோசகர் மூலம் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்க வேண்டும். தற்காப்பு கலைகள் பெண்களுக்கு மிகவும் முக்கியம். உடல் ரீதியான தொந்தரவு ஏற்படும் போது, தங்களை தற்காத்துக்கொள்ள உதவியாக இருக்கும். பள்ளி, கல்லூரிகளில் தற்காப்பு கலைகள் கற்றுக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்