பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி?-டாக்டர், கல்வியாளர்கள் கருத்து

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது எப்படி? என்பது குறித்து டாக்டர், கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-04-07 18:45 GMT

காலங்கள் கடந்தபோதும், நாகரிகங்கள் வளர்ந்தபோதும் பெண்களின் மீதான வன்முறைகளும், பாலியல் தாக்குதல்களும் குறைந்தபாடில்லை.

வரதட்சணை, தொடுதல், பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைக்கான முயற்சிகள் என பெண்களின் மீதான தாக்குதல்கள் என்பது நீண்டுகொண்டே செல்கின்றன.

பள்ளிகள், கல்லூரிகள் என எங்கு சென்றாலும் சொல்ல முடியாத துயரத்தை பெண்கள் அனுபவித்து வருகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல்கள் குறித்த புகார்கள் அதிகரித்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய மகளிர் ஆணையம் தகவலும் தெரிவித்திருந்தது.

பாலியல் குற்றங்கள்

இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க போக்சோ சட்டம் உள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள். ஆனால், பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போதும் வெளியே சொல்லப்பயப்படுகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் கணிசமாக அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி, கல்லூரிகளில்...

சமீப காலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த சம்பவங்களும், புகார்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

எனவே, பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு சிறு வயதில் இருந்தே பெண் பிள்ளைகளிடம் ஏற்படுத்துவது அவசியம் ஆகிறது.

இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

ஆலோசனை

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில்:-

ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உளவியல் ஆலோசனைகள் வழங்க வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நேரங்களில் போலியான குற்றச்சாட்டுகளும் வரும். அதுபோன்ற குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை குறித்து ஆராய வேண்டும். குற்றச்சாட்டு போலியானது என்று நிரூபிக்கப்பட்டால் குற்றம் சுமத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே, சில பள்ளிகளில் புகார் பெட்டி அமைப்பும், விசாகா கமிட்டியும் உள்ளன. இதை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். பள்ளிகளில் புகார் பெட்டி வைப்பதை கட்டாயப்படுத்த வேண்டும். பாலியல் துன்புறுத்தல் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மனநல ஆலோசகர் மூலம் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்க வேண்டும்.

பெற்றோர், ஆசிரியர், சமூகம்

நெல்லையை சேர்ந்த பள்ளி தமிழ் ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன்:-

இன்றைய காலச்சூழ்நிலையில் குழந்தைகள், மாணவ, மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் தகவல் அடிக்கடி வெளியாகிறது. இந்த பாதிப்பில் இருந்து மாணவ- மாணவிகளை பாதுகாப்பது நமது கடமை. குழந்தை பருவத்தில் இருந்து ஒழுக்கம், பண்பாடு, கலாசாரம், இவற்றை போதிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் போன்ற பல காரணிகளை இளம் வயதிலேயே புரிய வைக்க வேண்டும். எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் அடிக்கடி கண்காணிக்க வேண்டும். செல்போன் பயன்படுத்துகிற குழந்தைகளை மிகவும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

பெற்றோர், ஆசிரியர்கள், சமூகம் இந்த மூன்றும் இணைந்து ஒரு தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டால் தான் இப்படிப்பட்ட பாலியல் துன்புறுத்தல் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை, மாணவ செல்வங்களை மீட்கலாம்.

புகார் தெரிவிக்கலாம்

பாளையங்கோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜலட்சுமி:-

அரசு பள்ளிகளில் ஒவ்வொரு முதல் வாரமும் வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தப்படுகிறது. பள்ளியில் ஆசிரியர்கள் நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் ஆகியவற்றை பற்றி விளக்குகிறார்கள். அவர்களுக்கு இதுபோன்ற சங்கடமான சூழ்நிலைகள் இருந்தால், மாணவர்கள் தயக்கமின்றி அவற்றை வேண்டாம் என்று சொல்ல வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் அவர்கள் அதை தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் பள்ளிக்கு தெரிவிக்க வேண்டும். 1098 என்ற எண் அனைவருக்கும் தெரியும். இந்த எண்ணை தொடர்பு கொண்டு இதன் மூலமாகவும் மாணவர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க சொல்லி இருக்கிறோம்.

தங்கள் குழந்தைபோல்...

குற்றாலத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியை மதுமதி:-

முந்தைய காலங்களில் அனைத்து வீடுகளிலும் கூட்டு குடும்பமாக இருந்து வந்தோம். தற்போது கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். இதனால் குழந்தையை பார்க்கும் நேரம் மிகவும் குறைவு. எந்த குழந்தையாக இருந்தாலும் அவர்களது தினசரி பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் யாருடன் பழகுகிறார்கள்? எந்த இடத்திற்கு செல்கிறார்கள்? என்பதை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இதேபோன்று பள்ளி-கல்லூரிகளில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பதோடு நின்று விடாமல் படிக்கும் வளாகத்தில் தங்களது குழந்தைகள் போன்று மாணவ-மாணவிகளை கவனித்து தவறு செய்பவர்களை உடனடியாக கண்டுபிடித்து அவர்களது பெற்றோருக்கு கூற வேண்டும். அதே நேரத்தில் மாணவ-மாணவிகளுக்கு மன அழுத்தம் ஏற்படாத அளவில் பொறுமையுடன் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

தற்காப்பு வழிமுறைகள்

தென்காசி அரசு ஆஸ்பத்திரி மனநல டாக்டர் நிர்மல் -

குழந்தைகளுக்கு பிடிக்காததை யாராவது செய்தால் அதனை உடனே பெற்றோரிடம் கூறுவதற்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பாலியல் தொல்லைக்கு மாணவிகள் உட்படும்போது அங்கிருந்து தப்பிச்செல்ல தற்காப்பு வழிமுறைகளை பள்ளிகளில் கற்றுக் கொடுக்க வேண்டும். ஏதாவது சூழ்நிலையில் தான் இதுபோன்று நடைபெறும்.

அந்த நேரத்தில் தப்பிவிட்டால் பின்னர் இந்த தவறு நடப்பதற்கு வாய்ப்பு இருக்காது. மேலும் 181, 1098 ஆகிய அரசின் சிறப்பு அழைப்பு எண்கள் சேவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால் இந்த எண்களை கையாளுவதற்கு என அரசு பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்வார்கள்.

விழிப்புணர்வு மிகவும் அவசியம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெங்கடாசலம்:-

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு மிகவும் அவசியம். கட்டாயமாக தொடக்கப் பள்ளிகளிலேயே பாலியல் விழிப்புணர்வுக்காக, வாரம் இரண்டு வகுப்புகள் அந்தந்த பள்ளி ஆசிரியர்களால் நடத்தப்பட வேண்டும். மாணவ, மாணவிகளின் கூச்ச சுபாவங்களை போக்கி, உடல் ரீதியான மாற்றங்களை விளக்கி கூற வேண்டும்.

கண்காணிப்பு கேமரா

உடன்குடி அருகே உள்ள சுல்தான்புரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பா.ராஜசிங் பாஸ்கர்:-

பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் விரைவாக தண்டனை வழங்கப்பட வேண்டும். இதனால் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.

கல்வி நிலையங்களில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டால் குற்றங்களை தடுக்க முடியும்.

தவறான பாதை

முப்பிலிவெட்டியை சேர்ந்த கல்வியாளர் இஸ்ரவேல்:-

பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் செல்போன் பயன்படுத்துகின்றனர். இதில் பல விதமான படங்களையும் பார்க்கின்றனர். இதன்மூலமும் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. சமூக வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலவிடுகின்றனர். செல்போன்கள் அறிவை வளர்ப்பதற்கு பதிலாக எதிர்மறையாக செயல்படுகிறது. ஆகையால் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

மாணவிகள் பாதிக்கப்பட்டால், பள்ளிக்கூடத்தில் உள்ள புகார் பெட்டியில் புகாரை போடலாம். பெற்றோரிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.

கவனம் ஈர்க்கும் ஆடைகள்

உடன்குடியை சேர்ந்த கல்வியாளர் சுரேஷ்குமார்:-

மாணவிகள் அடுத்தவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆடைகள் மற்றும் அழகு சாதனங்களை அணிந்து கொண்டு பள்ளி, கல்லூரிக்கு வரக்கூடாது. எப்போதும் ஆசிரியர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசுவதை தவிர்க்க வேண்டும். அப்படி சந்திக்க நேரிட்டால் உடன் சக மாணவிகளை அழைத்து சென்று பார்க்க வேண்டும். அதையும் மீறி ஆசிரியர் அழைத்தால் உடனடியாக தங்களது பெற்றோர்களுக்கு தகவலை தெரிவிக்க வேண்டும்.

மாணவிகள் எப்பொழுதும் தங்களது குடும்ப பொருளாதார சூழ்நிலையை எக்காரணம் கொண்டும் ஆசிரியரிடம் தெரிவித்து பண உதவி பெறக் கூடாது. கல்வி சுற்றுலா மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் தொடர்பாக பயணம் மேற்கொள்ளும் போது ஆசிரியரிடம் பழகுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஆசிரியர் பேச்சு தவறாக இருந்தால் உடனடியாக மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மற்ற ஆசிரியர்களுக்கோ, நிர்வாகத்துக்கோ சொல்லக்கூடாது. இவ்வாறு செய்தால் பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும்.

இவ்வாறு கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்