மோகனூர்:-
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டியது எப்படி என்பது குறித்து கைதான பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
கட்டிட மேஸ்திரி கொலை
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே செல்லிபாளையம் காலணியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பெரியசாமி (வயது 37). இவரை அவருடைய மனைவி பிரேமா (35) கள்ளக்காதலன் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி விளக்கநத்தத்தை சேர்ந்த நந்திகேசவனுடன் (25) என்பவருடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்ததாக தெரிகிறது. கொலையை மறைக்க விபத்தில் இறந்ததாக நாடகம் ஆடியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மோகனூர் போலீசார் பெரியசாமியின் மனைவி பிரேமா, கள்ளக்காதலன் நந்திகேசவன், அவருடைய நண்பர் தனுஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பரபரப்பு தகவல்கள்
கள்ளக்காதலன் மீதான மோகத்தில் கணவனை தீர்த்துக்கட்டியது எப்படி என்பது குறித்து பிரேமாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரேமா கூறிய திடுக்கிடும் தகவல்கள் விவரம் வருமாறு:-
பேக்கரில் வேலை பார்த்த போது பிரேமாவுக்கும், நந்திகேசவனுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இவர்களது ரகசிய உறவு பேக்கரி உரிமையாளருக்கு தெரிய வரவே வேலையில் இருந்து இருவரையும் நீக்கி விட்டனர்.
இதற்கிடையே பிரேமா கள்ளக்காதல் பெரியசாமிக்கு தெரிய வரவும், வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று என்று மனைவியை பெரியசாமி கண்டித்ததாக கூறப்படுகிறது.
தீர்த்துக்கட்ட முடிவு
எனவே கள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் பிரேமா தவித்தார். செல்போனில் மட்டுமே பேசி வந்த அவர், பெரியசாமியை தீர்த்துக்கட்டினால் கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை வாழலாம் என மனதில் ஆசையை உண்டாக்கினார். அதனை கள்ளக்காதலனிடமும் கூறினார். அதற்கு நந்திகேசனும் சரி என ஒப்புக்கொண்டுள்ளார். அவரை எப்படி கொலை செய்யலாம் என திட்டம் போட்டனர்.
திட்டப்படி விபத்து நாடகமாட முடிவு செய்தனர். அதன்படி சம்பவத்தன்று காது வலிப்பதாக பிரேமா கணவரிடம் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் சாக போகிறோம் என்பதை அறியாத பெரியசாமியும் மனைவியின் பேச்சை நம்பி அவரை ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.
கம்பியால் அடித்துக் கொலை
வீட்டில் இருந்து புறப்பட்ட உடன் பிரேமா, கள்ளக்காதலனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். செல்லிபாளையம் பகுதியில் ஒரு வளையில் வந்த போது நந்திகேசவன், அவருடைய நண்பர் தனுஷ் இருவரும் வழிமறித்துள்ளனர். அப்போது பிரேமா, கணவரின் கைகளை பின்னால் பிடித்துக் கொண்டதாக தெரிகிறது. நந்திகேசவன் கம்பியால் பெரியசாமி தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் நிலைகுலைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கொலை திட்டத்தை கச்சிதமாக அரங்கேற்றிய நந்திகேசவனும், அவருடைய கூட்டாளி தனுசும் அங்கிருந்து தப்பி சென்றனர். பிரேமா உடனே உறவினர்களுக்கு தகவல் கொடுக்கிறார். கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இதில் கணவர் இறந்து விட்டார் என்று கூறி கதறி அழுதுள்ளார்.
போலீசில் சிக்கினர்
தகவல் அறிந்து போலீசாாரும், உறவினர்களும் விரைந்து வந்தனர். பெரியசாமி உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
கணவர் இறந்த சோகம் கூட இல்லாமல், கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கையை நினைத்து பிரேமா மகிழ்ச்சியில் திளைத்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், ரகசியமாக கண்காணித்தனர். கள்ளக்காதல் மோகத்தில் கணவரை பிரேமாவை தீர்த்துக்கட்டியது அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பிரேமாவும், அவருடைய கள்ளக்காதலனும் போலீசில் சிக்கியது தெரிய வந்தது.