தடை செய்த ஆன்லைன் விளையாட்டுகள் மீண்டும் பதிவிறக்கம் செய்யப்படுவது எப்படி?
தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகள் மீண்டும் பதிவிறக்கம் செய்யப்படுவது எப்படி? என்று கேள்வி எழுப்பியதுடன், இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என சைபர் கிரைம் போலீசார் மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.;
தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகள் மீண்டும் பதிவிறக்கம் செய்யப்படுவது எப்படி? என்று கேள்வி எழுப்பியதுடன், இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என சைபர் கிரைம் போலீசார் மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மாணவியை ஆஜர்படுத்த மனு
நாகர்கோவிலைச் சேர்ந்த அயறின் அமுதா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது மகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். சமீபத்தில் அவர் மிகவும் சோகமாக காணப்பட்டார். இதுபற்றி கேட்டதற்கு எதுவும் கூறவில்லை. இந்த நிலையில் எனது மகளை கடந்த 6-ந் தேதி முதல் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து கன்னியாகுமரி வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். இதுகுறித்து எனது மகளின் தோழிகளிடம் விசாரித்தனர்.
கடத்தப்பட்டாரா?
இதில் தடை செய்யப்பட்ட பப்ஜி மற்றும் ப்ரீ பயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் எனது மகள் ஆர்வம் காட்டியுள்ளார். ப்ரீபயர் ஆன்லைன் விளையாட்டின் மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்தான் ஆசைவார்த்தை கூறி, எனது மகளை அழைத்து சென்றுள்ளார். தற்போது எனது மகள் எங்கிருக்கிறார். என்ன செய்கிறார்? என்ற தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆன்லைன் விளையாட்டின் மூலம் அறிமுகமான நபர்தான் எனது மகளை கடத்தியுள்ளார். அவரிடம் இருந்து எனது மகளை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மீண்டும் விளையாடுவது எப்படி?
அப்போது நீதிபதிகள், ப்ரீபயர் உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. ஆனாலும் அந்த விளையாட்டுகளை ஆன்லைனில் எவ்வாறு மீண்டும் விளையாட முடிகிறது? இதுபோன்ற விளையாட்டுகளால் இளைய சமுதாயம் கடுமையான பாதிப்பை சந்திக்கும்.
தடை செய்யப்பட்ட விளையாட்டுகளை பதிவிறக்கம் செய்து மீண்டும் விளையாடுவதை தடுக்க சைபர் கிரைம் போலீசார் ஏன் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி, அதிருப்தியை தெரிவித்தனர்.
சூப்பிரண்டு பதில்
மேலும் கல்லூரி மாணவி மாயம் தொடர்பாக குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பதில் அளிக்க வேண்டும். ப்ரீபயர் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை நிரந்தரமாக தடுப்பது எப்படி? என்பது குறித்து சைபர்கிரைம் போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர், இந்த வழக்கு விரிவாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி, விசாரணையை ஒத்திவைத்தனர்.