நிலக்கடலை பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

நிலக்கடலை பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்று வேளாண்மை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2023-01-17 21:14 GMT

சேதுபாவாசத்திரம்;

சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் தற்போது பரவலாக நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலையை பொறுத்தமட்டில் இளம்பயிர்களில் சுருள்பூச்சி தாக்குதலும், சற்று வளர்ந்த பயிர்களில் புரடீனியா புழுவும் தாக்கக்கூடும். இவற்றை கட்டுப்படுத்த வயல்களில் இரவு 8 மணி முதல் 11 மணி வரை விளக்குபொறி வைத்து தாய் அந்துப்பூச்சியின் நடமாட்டத்தை கண்காணித்து தக்க பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். சுருள் பூச்சியை கட்டுப்படுத்திட டைகுளோர்வாஸ் 250மி.லிட்டர் அல்லது குளோர்பைரிபாஸ் 500 மி.லிட்டர் அல்லது மானோகுரோட்டபாஸ் 300மி.லிட்டர் இதில் ஏதேனும் ஒரு மருந்தினை 200லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் பரப்பில் மாலை வேளையில் கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கவேண்டும்.புரடீனியா புழுக்களை கட்டுப்படுத்த வரப்புகளில் பொறிப்பயிராக தட்டைப்பயிறு, ஆமனக்கு, மக்காச்சோளம் ஆகியவற்றை விதைக்க வேண்டும். இதனால் தீமை செய்யும் பூச்சிகள் அழிந்து நன்மை செய்யும் பூச்சிகள் பெருக வாய்ப்பு உள்ளது. வயல்களில் உள்ள புழுக்களை தின்று அழிக்கும் வகையில் பறவைகள் வந்து அமர்வதற்கு இருக்கைகள் அமைக்க வேண்டும். நிலக்கடலை மற்றும் பொறிப்பயிர்களின் நிலைகளில் உள்ள இளம்புழுக்களை கையால் எடுத்து நசுக்கி அழிக்கவேண்டும். புரடீனியா தாய் அந்துப்பூச்சிகளுக்கு உண்டான இனக்கவர்ச்சி பொறியினை வயலில் 4 அல்லது 5 இடங்களில் வைக்கவேண்டும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்