வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது; மரம் வேரோடு சாய்ந்தது

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது; மரம் வேரோடு சாய்ந்தது;

Update: 2022-09-26 19:50 GMT

தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு இடி-மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. பூதலூரில் அதிகபட்சமாக 168 மி.மீ. மழை பெய்தது. இந்த மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மரம் வேரோடு சாய்ந்தது.

வெயில் கொளுத்தியது

தமிழகத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக வெயில் கொளுத்துவதும், மழை பெய்வதுமாக இருந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த 2 மாதங்களாக மழை பெய்வதும், வெயில் அடிப்பதுமாக மாறி, மாறி நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் கொளுத்துவதைபோல வெயில் கொளுத்தியது. நேற்று முன்தினம் காலை முதல் வெயில் கடுமையாக காணப்பட்டது. பகலில் தான் வெளியில் கொடுமை என்றதால் இரவிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வெளுத்து வாங்கிய மழை.

இந்த நிலையில் இரவு 12.15 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. தொடர்ந்து இடி-மின்னலும் பயங்கரமாக காணப்பட்டது. சில நிமிடங்களில் மழை வெளுத்து வாங்கத்தொடங்கியது. தொடர்ந்து 2 மணி நேரம் பலத்த மழை நீடித்தது. அதன் பின்னர் சிறிது இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் 4 மணி முதல் மழை பெய்யத்தொடங்கியது.

இந்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை மாநகரில் எங்கு பார்த்தாலும் மழை நீர் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இந்த மழையால் ஒரே நாளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது

தொடர்ந்து பெய்த கனமழையால் தஞ்சை சீத்தா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் அவதி அடைந்தனர். தஞ்சை சாந்த பிள்ளைகேட் ரெயில்வே கீழ் பாலத்தில் வழக்கம்போல் தண்ணீர் தேங்கியது.

இதனால் அந்த வழியை கடந்து பூக்கார தெரு, விளாருக்கு செல்லும் பொதுமக்கள் மாற்று பாதையில் சென்றனர். சிலர் தண்ணீரை கடந்தும் சென்றனர். இதேபோல் வல்லம் பெரியார் நகர் பகுதியிலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

மரம் சாய்ந்தது

தஞ்சை ராஜப்பா நகர் பகுதியில் பழமையான வேப்பமரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தஞ்சை மாவட்டம் பூதலூரில் அதிக பட்சமாக 168 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்