ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தில் 65 பேருக்கு ரூ.8 கோடியில் வீடுகள்
திருவாரூரில் ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் 65 பேருக்கு வீடுகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ ஆகியோர் வழங்கினர்.;
திருவாரூர்:-
திருவாரூரில் ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் 65 பேருக்கு வீடுகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ ஆகியோர் வழங்கினர்.
குடியிருப்பு வீடுகள்
ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் காவிரி டெல்டாவில் உள்ள வெண்ணாறு உப வடிநிலத்தை சேர்ந்த ஆறுகளின் உள்கட்டமைப்பு, பாசன வசதி மற்றும் வெள்ள ஆபத்து குறைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தை செயல்படுத்த நீர் நிலை கரைகளில் உள்ள அனைத்து வித ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டி உரிய கணக்கீடுகள் செய்யப்பட்டன. இதில் 1,237 குடும்பங்கள் திட்டத்தினால் பாதிக்கப்படுவார்கள் என கண்டறியப்பட்டு குடியிருப்பு வீடுகள் மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நீர்வளத்துறை சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் கீழ் குடியிருப்பு வீடுகள் மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர்- எம்.எல்.ஏ. வழங்கினர்
நிகழ்ச்சியில் திட்டாணி முட்டம், திருவிடைவாசல், புனவாசல் ஆகிய மீள்குடியேற்ற பகுதியில் வசிப்பதற்கு ஏதுவாக 65 பேருக்கு ரூ.7 கோடியே 98 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் குடியிருப்பு வீடுகளுக்கான சாவி, வீட்டுமனைப்பட்டாக்கள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனாமணி, நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் முருகவேல், லதாமகேஸ்வரி (சிறப்பு திட்டம்), உதவி செயற்பொறியாளர்கள் சிதம்பரநாதன், எத்திராஜுலு, மீள்குடியேற்ற அலுவலர் வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உறுதிமொழி
முன்னதாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில், பூண்டி கலைவாணன் எம்.எல்ஏ. முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.