வீட்டை உடைத்து வெள்ளி குத்துவிளக்குகள் திருட்டு
பாளையங்கோட்டையில் வீட்டை உடைத்து வெள்ளி குத்துவிளக்குகள் திருடப்பட்டன.
பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலையில் இவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பாளையங்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். போலீசாரின் விசாரணையில், வீட்டின் பூஜை அறையில் இருந்த 5 வெள்ளி குத்துவிளக்குகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் மாடசாமி வந்தபிறகே திருடு போன பொருட்கள் குறித்து முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதேபோன்று பாளையங்கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்த மாணிக்கவாசகம் வெளியூருக்கு சென்றார். இவரது வீட்டின் முன்பக்க கதவும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். எனினும் மாணிக்கவாசகம் வந்த பின்னரே முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.