முள்ளுக்குறிச்சியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
முள்ளுக்குறிச்சியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்;
ராசிபுரம்:
ராசிபுரம் தாலுகா முள்ளுக்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 6 வீடுகளை இடித்து பாதை அமைத்து தரக்கோரி அந்த பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து அகற்றும் பணி நடந்தது. ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் ஆயில்பட்டி போலீசார், மண்டல துணை தாசில்தார், முள்ளுக்குறிச்சி, மங்களபுரம், நாமகிரிப்பேட்டை வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் நேற்று அங்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து அகற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.