ஓசூர் அரசு கால்நடைப்பண்ணையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல் வட்டம் கண்டுபிடிப்பு 13-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லும் கிடைத்தது
ஓசூர் அரசு கால்நடைப்பண்ணையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல் வட்டம் கண்டுபிடிப்பு 13-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லும் கிடைத்தது;
ஓசூர்:
ஓசூர் மத்திகிரியில் உள்ள அரசு கால்நடைப்பண்ணையில், 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல் வட்டம் மற்றும் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் இருப்பதை அறம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அறம் கிருஷ்ணன், விஜய் மோகன் வரலாற்று ஆசிரியர் சீனிவாசன் ஆகிய 3 பேரும் கள ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
தேன்கனிக்கோட்டைக்கு செல்லும் சாலையின் வலதுபுறம் அரசு கால்நடை பண்ணையின் மூன்றாவது கேட்டின் முன்பகுதியில், 2 துண்டுகளாக உடைந்த நிலையில், 13 அல்லது 14-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது. கால்நடைபண்ணையின் உட்பகுதியில் இருந்த இந்த நடுக்கல்லை புதிதாக கேட் அமைக்க வேண்டி இரண்டாக உடைக்கப்பட்டு சாலையோரம் வீசி உள்ளனர். பழமையான இரண்டு கல்தூண்களும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன.
இதன் எதிர் புறம் சாலையின் இடதுபுறம் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் பின்புறம் மிகப்பெரிய கல் வட்டம் இருப்பதை காண முடிந்தது. தமிழகத்தில் இரும்பின் பயன்பாடே 4,200 ஆண்டுகளை கடந்து இருக்கிறது. கல்வட்டங்களின் வயது இதனினும் தொன்மையானதாக இருக்க வேண்டும். இறந்தவர்களின் நினைவாக ஏதாவது ஒரு அடையாளத்தை வைக்க விரும்பி அதன் தொடக்க காலமாகவே இந்த கல்வட்டங்கள் ஏற்படுத்தும் முறையை தொடங்கிஇருக்க வேண்டும்.
சுமார் 50 அடி விட்டத்தில் உள்ள கல்வட்டத்தை சுற்றியும் பெரும் பாறை கற்களை வட்டமாக வைத்துள்ளனர் இதன் காலம் 3 ஆயிரம் அல்லது 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நமது தொல்குடிகளின் வாழ்விடமாக இருந்திருக்க வேண்டும்.
இதே கால்நடை பண்ணையில் 200 அல்லது 300 ஆண்டுகள் பழமையான நிறைய சிறு கோவில்கள் இருப்பதை பார்க்க முடிந்தது. மேலும் ஆங்கிலேய அதிகாரிகள் வளர்த்த 10 வளர்ப்பு உயிரினங்களுக்கு அதன் பெயர் இறந்த தேதியிட்டு கல் நட்டு வைத்துள்ளனர். சுமார் 400 ஆண்டுகள் பழமையான ஆலமரமும் பயன்பாடற்ற பங்களாக்களும் நிறைய உள்ளன. சாலையின் வலதுபுறத்தில் அனைத்து வகையான கால்நடைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதனை ஒட்டிய பின்பகுதியில் 1828-ம் ஆண்டு முதல் 1904-ம் ஆண்டு வரை இறந்த சுமார் 20-க்கும்மேற்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளின் கல்லறைகள் ஒரே இடத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.