கால்நடை மருந்தகம் ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்படுமா?

பெரியவாளவாடியில் உள்ள கால்நடை மருந்தகம் ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்படுமா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Update: 2023-06-07 17:57 GMT

பெரியவாளவாடியில் உள்ள கால்நடை மருந்தகம் ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்படுமா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கால்நடை மருந்தகம்

உடுமலையை அடுத்த பெரிய வாளவாடியில் கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற கால்நடை மருந்தகம் உள்ளது. பெரியவாளவாடி, சின்னவாளவாடி, பழையூர், அம்மாபட்டி, மொடக்குப்பட்டி, வடபூதிநத்தம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை சிகிச்சைக்கு கொண்டு வருகின்றனர். அவற்றுக்கு நாள்தோறும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் மருந்தகம் அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்படாததால் உயர் சிகிச்சைக்கு கால்நடைகளை உடுமலைக்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கால்நடைகளுக்கு நோய் தாக்குதல்

விவசாயத்தின் உபதொழிலாக கருதப்படும் கால்நடைகள் வளர்ப்பு விவசாயிகளுக்கு சாகுபடி பணிகளில் இழப்பு ஏற்படும் போது கரம் கொடுத்து உதவி வருகிறது. அதே போன்று நிலமற்ற கால்நடை வளர்ப்போர்க்கும் கால்நடைகள் வாழ்வாதாரத்தை அளித்து வருகிறது. இதனால் பால், தயிர், மோர், வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைத்து வருகிறது. அத்துடன் இயற்கை விவசாயம், பஞ்சகாவியா போன்ற இயற்கை உரங்கள் தயாரிக்கவும் கால்நடைகள் ஆதாரமாக உள்ளது.

இந்த சூழலில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் எதிர்பாராத விவரமாக நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழல் ஏற்படுகிறது. அப்போது அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் கால்நடை மருந்தகத்தை நாடிச் செல்கின்றனர். ஆனால் அங்கு முழு நேர மருத்துவர் உயர் சிகிச்சைக்கான உபகரணங்கள் இல்லாததால் உடுமலைக்கு கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இதனால் கால நேரவிரயமும், வருமான இழப்பும், சாகுபடி பணிகளும் பாதிக்கப்படுகிறது. அத்துடன் கால்நடைகளும் தக்க தருணத்தில் சிகிச்சை கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகும் சூழல் நிலவுகிறது.

தரம் உயர்த்த வேண்டும்

எனவே பெரிய வாளவாடியில் உள்ள கால்நடை மருந்தகத்தை கால்நடை அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும். இதனால் கால்நடை தொழிலும் ஊக்குவிக்கப்படும். விவசாயிகளும் கால்நடை வளர்ப்போரும் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்