அவினாசி அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்படுவது எப்போது? என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்பில் உள்ளனர்.
அவினாசி
அவினாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சியில் 1 லட்சம் மக்கள் உள்ளனர். இப்பகுதியில் உள்ள மக்கள் அவசர சிகிச்சைக்கு அவினாசி அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனையில் போதிய இடவசதி, மருத்துவர்கள் மற்றும் கருவிகள் இல்லை. இதனால் விரைவாக மருத்துவம் செய்ய முடியாத நிலை உள்ளது.
மேலும் இரவு நேரங்களில் பிரசவ வலி ஏற்பட்டு கர்ப்பிணிகள் வரும் சமயத்தில் போதிய மருத்துவர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் மிக அவதிக்குள்ளாக வேண்டியுள்ளது.
எனவே 24 மணி நேர அவசர சிகிச்சைப்பிரிவு செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 5. கி.மீ தொலைவில் அவசர சிகிச்சை பிரிவு செயல்பட வேண்டும். இதில் நவீன ஆய்வுகூடம், ரத்த சேமிப்பு அறை, 30 படுக்கைகள் கொண்ட குழந்தைகள் வார்டு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம் சார்ந்த 24 மணி நேர சேவை மையம், குளிர்சாதன வசதியுடன் கூடிய பிணவரை கட்டமைப்புடன் மருத்துவமனையாக மாற்ற மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி மற்றும் தாராபுரம் அரசு மருத்துவமனைைய தேர்வு செய்துள்ளது.
உண்ணாவிரதம்
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுகாதாரத்துறை நிர்வாகம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து தாய் சேய் நலம் மற்றும் 40 படுக்கை வசதி மற்றும் ஆய்வகங்களுக்காக ரூ.5 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை வழங்கியது. இதற்கான எந்தப் பணியும் இதுவரை அரசாங்கத்தால் நடைமுறைப் படுத்தாத நிலையில் உள்ளது.
எனவே அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த ஒருவருடமாக எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையை கண்டித்து அவினாசி நல்லது நண்பர்கள் அறக்கட்டளை நிர்வாகி ரவிக்குமார் தலைமையில் வருகிற 29-ந் தேதி அரசு மருத்துவமனை முன்பு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.