குதிரை, மாட்டு வண்டி பந்தயம்
கறம்பக்குடியில் குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மனிதநேய ஒருமைப்பாட்டு கலை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் மற்றும் ஆண்கள், பெண்கள் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. காலையில் பெரிய மாடு, கரிச்சான் மாடு, கரிச்சான் குதிரை பந்தயம் நடைபெற்றன. 10 மைல் தூரம் சென்று திரும்பும் வகையில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் தஞ்சாவூர், மதுரை, கோயம்புத்தூர், ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் கலந்து கொண்டு மாடு, குதிரை வண்டிகளை ஓட்டிச்சென்றனர். இதில் வெற்றிபெற்றவர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பரிசுகள் வழங்கப்பட்டன. மாலையில் கரிச்சான் ஒற்றை மாடு, நடுமாடு, பெரிய குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாடு மற்றும் குதிரை வண்டிகள் பங்கேற்றன.
ஓட்டப்பந்தயம்
தொடர்ந்து ஆண்களுக்கான ஓட்டப்பந்தயம் நடந்தது. வயது வித்தியாசம் இன்றி நடத்தப்பட்ட இந்த போட்டியில் 66 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதையடுத்து பெண்களுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் வீராங்கனைகள் கலந்துகொண்டு 10 கிலோமீட்டர் தூரம் ஓடிச்சென்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.
வெள்ளி மோதிரம்
அனைத்து போட்டிகளிலும் முதல் 4 இடங்களை பெற்றவர்களுக்கு வெள்ளி மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அனைத்து கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தக, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பந்தயத்தை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர்.