போலீஸ் நிலையம் அருகே பயங்கரம்: மாமியார்-மருமகள் கொடூரக்கொலை
மாமியாரும், இளம்பெண்ணும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களது வீட்டின் பின்புறம் உடல்கள் சாக்குப்பைகளால் மூடப்பட்டு இருந்தன. போலீஸ் நிலையம் அருகே நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
மதுரை,
மதுரை எல்லீஸ்நகர் போடி ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). வாடகை கார் டிரைவர். இவருக்கும், தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த அழகுபிரியா (22) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுடன் மணிகண்டனின் தாயார் மயிலம்மாள் வசித்து வந்தார். இவர்கள் வசித்து வந்த வீடானது எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்துக்கு அருகில் தான் உள்ளது.
நேற்று முன்தினம் மணிகண்டன் வெளியூர் சென்றுவிட்டார். அப்போது, அவருடைய சகோதரியான துவரிமான் பகுதியில் வசித்து வரும் மகாலட்சுமி (45), மணிகண்டனின் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் பின்பக்கத்தில் மயிலம்மாள், அவருடைய மருமகள் அழகுபிரியா ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
ரத்தக்கறை
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அலறினார். அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசாரும் ஓடிவந்து பார்த்தனர்.
மாமியார், மருமகள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறும்போது, "மகாலட்சுமியும், அவருடைய மகன் குணசீலனும் அவ்வப்போது மணிகண்டன் வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். சம்பவ நடந்த அன்றும் மகாலட்சுமி வந்திருக்கிறார். அப்போது, அவருடைய மகன் உள்பட 2 பேர் இருந்துள்ளனர். ஆனால், மயிலம்மாள், அழகுப்பிரியா அங்கு இல்லை. இதுகுறித்து தன் மகனிடம் மகாலட்சுமி கேட்டபோது, இருவரும் கோவிலுக்கு சென்றுள்ளனர் என கூறி இருக்கிறார். ஆனால், வீட்டில் ஆங்காங்கே ரத்தம் சிதறி கிடந்ததால் சந்தேகம் அடைந்த மகாலட்சுமி வீட்டுக்கு பின்பகுதியில் சென்று பார்த்தபோது, ஒரு இடத்தில் சாக்குப்பைகளால் மூடப்பட்டு இருந்தது. அதை திறந்து பார்த்தபோது, மயிலம்மாள், அழகுபிரியாவின் உடல்கள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் எங்களிடம் தகவல் தெரிவித்துள்ளார் என கூறினர்.
3 பேரிடம் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக குணசீலன் உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவிலேயே கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்று தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மாமியார், மருமகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.