ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: ஊழியருக்கு தீவிர சிகிச்சை
வில்லிவாக்கம் சிக்கோ நகரில் தனியார் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய ஊழியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;
வில்லிவாக்கம் சிக்கோ நகரில் தனியாருக்கு சொந்தமான ரசாயன பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை திடீரென தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வில்லிவாக்கம், செம்பியம், அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு போலீசார் 20-க்கும் மேற்பட்டோர் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர் கீர்த்திவாசன் (வயது 34) என்பவருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து குறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.