தேனியில் விரைவில் அமைகிறது: 3 சாலைகளை இணைக்கும் புதிய மேம்பாலம்: கலெக்டர் ஆய்வு
தேனியில் பிரதான 3 சாலைகளை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.;
புதிய மேம்பாலம்
தேனி நகர் மதுரை சாலையில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதுபோல், பெரியகுளம் சாலையிலும் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தேனியில் மேலும் ஒரு மேம்பாலம் அமைக்க தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தேனி பழைய பஸ் நிலையம் மற்றும் பெரியகுளம் சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் அன்றாடம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இந்த பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 3 பிரதான சாலைகளை இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைகிறது.
அதன்படி, கம்பம் சாலையில் கொட்டக்குடி ஆற்றுப்பாலத்தில் தொடங்கி, நேரு சிலையில் இருந்து இரண்டாக பிரியும் வகையில் புதிய மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொட்டக்குடி ஆற்றில் இருந்து மதுரை சாலையில் பகவதியம்மன் கோவில் தெரு சந்திப்பில் இருந்து சுமார் 600 மீட்டர் நீளமும், நேரு சிலை சிக்னலில் இருந்து போலீஸ் நிலையம் கடந்து தனியார் ஸ்கேன் மையம் வரை சுமார் 800 மீட்டர் நீளமும் மேம்பாலம் அமைகிறது. இதில் கொட்டக்குடி ஆற்றில் இருந்து மதுரை சாலை வரை 7 மீட்டர் அகலத்திலும், நேரு சிலையில் இருந்து பெரியகுளம் சாலையில் 14 மீட்டர் அகலத்திலும் பாலம் அமைய உள்ளது.
கலெக்டர் ஆய்வு
இதற்கான தொழில்நுட்ப ஆய்வு முடிவடைந்து அரசின் பரிந்துரைக்கு சென்றுள்ள நிலையில், இந்த பாலம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று ஆய்வு செய்தார். இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி உள்ளிட்ட அடுத்தக்கட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வின்போது, நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் ரமேஷ், உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.