தேனி, ஆண்டிப்பட்டியில் கோவில்களில் கும்பாபிஷேக விழா
தேனி, ஆண்டிப்பட்டியில் உள்ள கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.;
கும்பாபிஷேகம்
தேனி அருகே பூதிப்புரத்தில், வாழையாத்துப்பட்டி, பூதிப்புரம், ஆதிபட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, கெப்புரெங்கன்பட்டி, வலையபட்டி ஆகிய கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட ஆதிபராசக்தி உடனுறை நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை காண்பதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரண்டனர்.
பக்தர்கள் முன்னிலையில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு வழிபாடு, யாகசாலை பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் 6 கிராம மக்கள் செய்திருந்தனர்.
கலசத்தில் புனிதநீர்
ஆண்டிப்பட்டி அருகே அம்மாபட்டியில் பழமையான அங்காள ஈஸ்வரி, வீர வெங்கட்டம்மாள், பாப்பாத்தி அம்மாள் கோவில் உள்ளது. இங்கு பரிவார தெய்வங்களான சிவபெருமான், விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை, கருப்பண சாமி, ஆஞ்சநேயர் சுவாமிகள் உள்ளன. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 2 நாட்களாக யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாகுதி நடந்தது.
இதனையடுத்து நேற்று காலை கடம் புறப்பாடாகி கோவிலின் விமான கலசத்தில் பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர்களுக்கு பால், பழம், நெய், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல், கூடலூரில் நாகவள்ளி போலஜ்ஜியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து கோ பூஜை பிம்மசுத்தி, 2-ம் கால யாக பூஜை, மகாபூர்ணகுதி நடந்தது. பின்னர் பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனி நீர் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.