வெண்ணந்தூர் அருகே கோவில் திருவிழாவில் அக்னி கரகம் எடுத்த பக்தர்கள்-தேனீக்கள் கொட்டியதில் 10 பேர் காயம்
வெண்ணந்தூர் அருகே கோவில் திருவிழாவில் பக்தர்கள் அக்னி கரகம் எடுத்து சென்றபோது, தேனீக்கள் கொட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.
வெண்ணந்தூர்:
கோவில் திருவிழா
வெண்ணந்தூர் அருகே வாய்க்கால் பட்டறை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆடி திருவிழா கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்து வந்தது. மேலும் பக்தர்கள் விரதம் இருந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வந்தனர்.
நேற்று முன்தினம் பூவோடு பற்ற வைத்தல் நிகழ்ச்சியுடன், பொங்கல் வைபவம் தொடங்கியது. நேற்று காலை அக்னி கரகம், பால்குடம், தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதையொட்டி பக்தர்கள் அக்னி கரகம் எடுத்து, மேள தாளங்கள் முழங்க கோவிலுக்கு ஆடியபடி ஊர்வலமாக வந்தனர்.
தேனீக்கள் கொட்டின
மாரியம்மன் கோவில் அருகே பழமையான புளியமரம் ஒன்று உள்ளது. இந்த புளிய மரத்தில் மலை தேனீ கூடு கட்டி உள்ளது. பக்தர்கள் எடுத்த அக்னி கரகத்தில் இருந்து வந்த புகையால், தேனீக்கள் ஆவேசமடைந்தன. அவை பக்தர்கள், இசை வாத்தியங்களை முழங்கி வந்தவர்களை விரட்டி, விரட்டி கொட்ட தொடங்கின. இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
தேனீக்கள் கொட்டியதில் சிறுவன் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக வெண்ணந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர். கோவில் திருவிழாவின் போது பக்தர்களை தேனீக்கள் விரட்டி, விரட்டி கொட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.