தொழிலாளி ஈமச்சடங்கின் போது ஊதுபத்தி ஏற்றியதால் தேனீக்கள் கொட்டி 30 பேர் படுகாயம்-ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Update: 2022-10-20 18:45 GMT

பாப்பாரப்பட்டி:

தொழிலாளி ஈமச்சடங்கின் போது ஊதுபத்தி ஏற்றியதால் தேனீக்கள் கொட்டி படுகாயம் அடைந்த 30 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஈமச்சடங்கு

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பாலவாடி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் குட்டியப்பன். தொழிலாளியான இவர் கடந்த வாரம் இறந்தார். இதையடுத்து அவருக்கு இறுதி சடங்கு செய்து, மயானத்தில் உடல் புதைக்கப்பட்டது.

இந்தநிலையில் குட்டியப்பனுக்கு ஈமச்சடங்கு செய்ய நேற்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் மயானத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் குட்டியப்பன் சமாதியில் ஈமச்சடங்கு செய்து கொண்டிருந்தனர். மேலும் ஊதுபத்திகளை ஏற்றி வழிபட்டனர்.

தேனீக்கள் கொட்டியது

அப்போது அந்த ஊதுபத்திகளில் இருந்து அதிகளவு புகை வெளியேறியது. இந்த புகை அருகே மரத்தில் இருந்த தேனீக்களில் கூட்டில் பட்டது. இதனால் தேனீக்கள் குட்டியப்பனுக்கு ஈமச்சடங்கு செய்ய வந்திருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை கொட்டியது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனால் அவர்களை தேனீக்கள் விடாமல் துரத்தி சென்று கொட்டியது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

30 பேருக்கு சிசிச்சை

அவர்கள் அனைவருக்கும் பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்த சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் படுகாயம் அடைந்த சதீஷ்குமார், ராதா, மாதையன், முனிராஜ், மாதேஷ் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

தொழிலாளி ஈமச்சடங்கின்போது ஊதுபத்தி ஏற்றியதால் தேனீக்கள் கொட்டி 30 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்