ஓமியோபதி டாக்டர் வீட்டில் 102 பவுன் நகை கொள்ளை

வாசுதேவநல்லூரில் கோவிலுக்கு சென்றபோது ஓமியோபதி டாக்டர் வீட்டில் 102 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-07-20 19:00 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூரில் கோவிலுக்கு சென்றபோது ஓமியோபதி டாக்டர் வீட்டில் 102 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓமியோபதி டாக்டர்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் புதுமந்தை 3-வது தெருவைச் சேர்ந்தவர் சமுத்திர வேலு. இவர் அப்பகுதியில் பிரபலமான ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

இவருடைய மூத்த மகன் மணிவண்ணன் (வயது 40). இவர் தனது மனைவி, பிள்ளைகளுடன் முனியாண்டி கோவில் பின்புறம் உள்ள ெதருவில் வசித்து வருகிறார். ஓமியோபதி டாக்டரான மணிவண்ணன் தனியாக கிளினிக் வைத்தும் நடத்தி வருகிறார்.

கோவிலுக்கு சென்றனர்

கடந்த 18-ந் தேதி மணிவண்ணன் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் திருநள்ளாறு கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தனர். வீட்டின் முன்பு இருந்த இரும்பு கதவு மூடப்பட்டிருந்த நிலையில் உள்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. அங்கிருந்த தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

102 பவுன் கொள்ளை

இதுகுறித்து உடனடியாக வாசுதேவநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், புளியங்குடி துணை சூப்பிரண்டு அசோக்குமார், வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், காம்பவுண்டு சுவர் வழியாக ஏறிக்குதித்து உள்ளே புகுந்துள்ளனர். பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க சங்கிலிகள், கம்மல், வளையல், மோதிரம், கொலுசு என மொத்தம் 102 பவுன் தங்க நகைகள், ெவள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை ேபான நகைகளின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் இருக்கும்.

தனிப்படை அமைப்பு

தொடர்ந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து ஓடியது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை சேகரித்தனர். அப்பகுதியில் பல்வேறு வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த துணிகர கொள்ளை குறித்து மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தப்பிச்சென்ற மர்மநபர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் நகைகளை அள்ளிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பரபரப்பு

வாசுதேவநல்லூரில் ஓமியோபதி டாக்டர் வீட்டில் 102 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்