மோட்டார் சைக்கிள் மீது நின்றபடி சென்று ஊர்க்காவல் படைவீரர் விழிப்புணர்வு
போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து திருவண்ணாமலையில் ஊர்க்காவல் படைவீரர் ஒருவர் ஓடும் மோட்டார்சைக்கிளில் நின்றவாறு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.;
திருவண்ணாமலை
போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து திருவண்ணாமலையில் ஊர்க்காவல் படைவீரர் ஒருவர் ஓடும் மோட்டார்சைக்கிளில் நின்றவாறு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவண்ணாமலை அருகில் உள்ள இழுப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். எம்.பி.ஏ. பட்டதாரி வாலிபரான இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் போதை பொருட்களை ஒழிக்க மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மது, போதை பொருட்கள் ஒழிப்பு குறித்தும், 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடும் வகையிலும் சந்தோஷ் தனது உடலில் தேசிய கொடியை கட்டிக்கொண்டு விழிப்புணர்வு பதாகையை கையில் ஏந்திய படி தானே மோட்டார் சைக்கிளை ஓட்டி அதன் மீது ஏறி நின்று சாகசம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இவர் சுமார் 200 மீட்டருக்கு மேல் மோட்டார் சைக்கிள் மீது நின்ற படி சென்றார். இது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து ஓடும் மோட்டார் சைக்கிள் நின்றபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய அவரை பொதுமக்கள் பாராட்டினர்.